புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா


புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Aug 2020 3:30 AM IST (Updated: 13 Aug 2020 8:34 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை,

கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டங்களுள் ஒன்றாக புதுக்கோட்டை இருந்து வந்தது. அதன்பிறகு, சென்னை மற்றும் வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் தொற்று பரவ தொடங்கியது. அதன்பிறகு படிப்படிப்பாக அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 147 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம், மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 534 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 414 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று 76 பேர், பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்தநிலையில் கொரோனா சிகிச்சையில் இருந்த 45 வயதுடைய ஆண், 75 வயதுடைய முதியவர் ஆகியோர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

பொன்னமராவதி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவரின் கணவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

அரிமளம் ஒன்றியம் ராயவரத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 30 வயது பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த பெண்ணின் 2 வயது ஆண் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அந்த குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரிமளம் ஒன்றியத்தில் இதுவரை 77 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 41 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் ஆகி விட்டனர். 35 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு மூதாட்டி இறந்து விட்டார்.

Next Story