ராணிப்பேட்டை மாவட்டத்தில், மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை தடுப்பது எப்படி? - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரினை படைப்புழு தாக்குதலில் இருந்து தடுப்பது எப்படி? என்பது குறித்து கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்காச்சோளம் விதைப்பு பணி ஜூலை மற்றும் ஆகஸ்டு மாத இறுதியில் நிறைவு பெறும். எனவே மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பின்பற்றவும்.
கோடை உழவு செய்தல், கடைசி உழவில் ஒரு எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுதல், உயிர் பூச்சிக்கொல்லியான பவேரியா பேசியானா கொண்டு விதை நேர்த்தி ஆகியவற்றை செய்ய வேண்டும். ஒரே சமயத்தில் அனைத்து விவசாயிகளும் விதைத்தல், இறவை பயிருக்கு 60 சென்டி மீட்டர் 25 சென்டி மீட்டர் என்ற இடைவெளியும், மானாவாரி பயிருக்கு 45 சென்டி மீட்டருக்கு 20 சென்டி மீட்டர் என்ற இடைவெளியும், பராமரித்து 10 வரிசைக்கு ஒரு வரிசை 75 சென்டி மீட்டர் இடைவெளி விட்டு விதைக்கவும்.
ஒரு எக்டருக்கு சூரிய விளக்கு பொறி ஒன்றும், 12 இனக்கவர்ச்சி பொறிகளும் வைத்து பூச்சி நடமாட்டத்தைக் கண்காணிக்கவும். காராமணி, சூரியகாந்தி, எள், சோளம் மற்றும் சாமந்தி பயிர்களை வரப்பு பயிராகவும், உளுந்து பாசி பயறு வகை பயிர்களை ஊடுபயிராகவும் பயிரிட்டு நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும். வயலில் முட்டை குவியல்கள் மற்றும் இளம்புழுக்கள் தெரிந்தால் உடனே அவற்றை சேகரித்து அழிக்கவும். தொடர்ந்து மக்காச்சோளம் சாகுபடி செய்வதைத் தவிர்க்கவும். மணலுடன் சுண்ணாம்புத்தூள் 9:1 என்ற விகிதத்தில் கலந்து குருத்துகளில் இட வேண்டும்.
டிரைக்கோகிரம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணிகளை வெளியிட வேண்டும். இதையும் மீறி படைப்புழு தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் தாவர பூச்சிக்கொல்லியான அசாடிராக்டின் அல்லது 5 சதவேப்பங்கொட்டை கரைசல் தெளிக்கவும்.
புழுக்களின் இளம் பருவத்தில் மெட்டரைசியம் அனிசோபிலே அல்லது பவேரியா பாசியானா என்ற உயிரி பூச்சிக்கொல்லியும், வளர்ச்சி அடைந்த புழுக்களை கட்டுப்படுத்துவதற்கு எமாமெக்டின் பென்ஸயேட் 5 சதவீதம் ஏக்கருக்கு 80 கிராம் அல்லது ஸ்பைனிடோரம் 11.7 சதவீதம் 100 மில்லி என்ற அளவில் உபயோகப் படுத்தவும். எனவே மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கூறிய பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து பயன் அடையலாம்.
இந்தத் தகவலை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story