விழுப்புரம் அருகே பயங்கரம்: கோவில் பூசாரி வெட்டிக்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை


விழுப்புரம் அருகே பயங்கரம்: கோவில் பூசாரி வெட்டிக்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Aug 2020 11:39 AM IST (Updated: 13 Aug 2020 11:39 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே கோவில் பூசாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள வடவாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 45). இவர் சின்னக்கள்ளிப்பட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்து விட்டு சமையல் அறையில் படுத்து தூங்கினார். நள்ளிரவு 1.45 மணியளவில் ஏதோ சத்தம் கேட்டு தனசேகரனின் மகள் சத்யா எழுந்து வந்து பார்த்தார்.

அப்போது அங்கு தனசேகரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது வலதுபக்க கழுத்து, தோள் பட்டை ஆகிய இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், வளவனூர் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கு தனசேகரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

பின்னர் தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து தடயங்களை கைப்பற்றினர். தொடர்ந்து, போலீஸ் மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டு, கொலை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி அந்த தெரு பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பின்னர், தனசேகரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தனசேகரனின் உறவினர்கள், அக்கம், பக்கத்தினர் மற்றும் அவர் கோவில் பூசாரியாக இருந்து வரும் சின்னக்கள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாமா? என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில் தனசேகரனின் மனைவி ராஜேஸ்வரி, மகள் சத்யா மற்றும் உறவினர் ஒருவர் என 3 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story