ஸ்டூடியோ உரிமையாளரை கொன்று புதைத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


ஸ்டூடியோ உரிமையாளரை கொன்று புதைத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Aug 2020 12:00 PM IST (Updated: 13 Aug 2020 11:50 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் ஸ்டூடியோ உரிமையாளரை கொன்று புதைத்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தேனி,

தேனி சேல்ஸ் சொசைட்டி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 54). இவர், தனது மருமகன் முரளிதரனுடன் இணைந்து தேனி பழைய பஸ் நிலையம் அருகில் ஸ்டூடியோ நடத்தி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் வெளியே சென்ற கோவிந்தராஜ் மாயமானார். மறுநாள் கோவிந்தராஜின் செல்போன் எண்ணில் இருந்து முரளிதரன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

எதிர்முனையில் பேசிய நபர், கோவிந்தராஜ் வடமாநில பெண் ஒருவருடன் தவறாக நடந்து கொண்டு அந்த பெண்ணை கொலை செய்து விட்டதாகவும், அந்த பெண் தொடர்பான புகைப்படங்கள் உள்ள மெமரி கார்டு சின்னமனூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டு உள்ள கோவிந்தராஜின் ஸ்கூட்டரில் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விஷயத்தை போலீசில் தெரிவிக்காமல் இருக்க கொலை செய்யப்பட்ட வடமாநில பெண்ணின் தரப்பை சேர்ந்த 6 பேருக்கு தலா ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்.

இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் முரளிதரனின் மனைவி வினோதினி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அல்லிநகரம் வடக்கு மச்சால் தெருவை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி சீனிவாசன் (40), கடமலைக்குண்டு ராமானுஜம் தெருவை சேர்ந்த மாரிச்சாமி (39) ஆகியோர் செல்போனில் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது, கோவிந்தராஜை அவர்கள் சேர்ந்து கொலை செய்து தேனி புறவழிச்சாலையில் உள்ள கரட்டுப் பகுதியில் புதைத்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி கோவிந்தராஜ் உடலை மீட்டனர். அவருக்கு சேலை அணிவித்து, தலையில் சவுரி முடி, பூ வைத்து பெண் போன்று சித்தரிக்கப்பட்டு இருந்தது.

பிடிபட்ட இருவரிடமும் போலீசார் மேலும் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கோவிந்தராஜை அவர்கள் இருவரும் கேமராக்கள் மற்றும் பிளாட்டினம் பொருட்கள் இருப்பதாக ஏமாற்றி அங்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து மயங்க வைத்து விட்டு, அவரை கடத்தி வைத்து இருப்பதாக கூறி மருமகன் முரளிதரனிடம் பணம் பறிக்க திட்டமிட்டனர். ஆனால், குளிர்பானத்தை அவர் குடிக்க மறுத்த நிலையில் அரிவாளால் அவரை வெட்டி கொலை செய்தனர்.

பின்னர், அவர் உடலை பெண் போன்று சித்தரித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அந்த புகைப்படத்தை வடமாநில பெண் என்றும், அவரை கோவிந்தராஜ் கொன்று விட்டது போலும் பொய்யான தகவலை கூறி முரளிதரனிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் கையில் கிடைத்தவுடன் தலைமறைவாகும் எண்ணத்தில் அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் கோவிந்தராஜ் உடலை புதைப்பதற்கு முன்பு அவர் அணிந்து இருந்த தங்க மோதிரங்கள், சட்டைப் பையில் இருந்த ரூ.500 ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தடயங்களை மறைத்ததாகவும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீனிவாசன், மாரிச்சாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் வெள்ளைச்சாமி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக மாரிச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி அப்துல்காதர் நேற்று தீர்ப்பு கூறினார். நீதிபதி தனது தீர்ப்பில், “மாரிச்சாமி இறந்து விட்டதால், மற்றொரு குற்றவாளியான சீனிவாசனுக்கு நகைகள், பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற குற்றத்துக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, கொலை செய்த தடயங்களை மறைத்த குற்றத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை, கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 லட்சம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. தண்டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும். முதலில் 3 ஆண்டு சிறை தண்டனையையும், பின்னர் 7 ஆண்டு சிறை தண்டனையையும் அனுபவித்த பிறகு ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சீனிவாசனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story