ஈரோட்டில், கொரோனாவுக்கு 2 பேர் பலி - மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு தொற்று


ஈரோட்டில், கொரோனாவுக்கு 2 பேர் பலி - மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 13 Aug 2020 11:56 AM IST (Updated: 13 Aug 2020 11:56 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வருவதால் மாவட்ட நிர்வாகத்துடன், மாநகராட்சி இணைந்து பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி மாநகர் பகுதியில் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதுடன் அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளச்சிங் பவுடரும் போடப்படுகிறது. பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது.

இந்த நிலையில் ஈரோடு சங்குநகர் பகுதியை சேர்ந்த 69 வயது பெண் ஒருவர் கடந்த 4-ந்தேதியும், ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் கடந்த 6-ந்தேதியும், காய்ச்சல் காரணமாக ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இவர்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது இவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று 2 பேரும் இறந்தனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 1,115 பேர் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 1,164 ஆக உயர்ந்தது.

நேற்று புதிதாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் 24 பேரும், பவானி பகுதியில் 7 பேரும், கோபி பகுதியை சேர்ந்த 5 பேரும், சென்னிமலை மற்றும் அந்தியூர் பகுதிகளில் தலா 3 பேரும், கொடுமுடி மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் தலா 2 பேரும், சித்தோடு, மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 22 பேருக்கும், தொடர்பில்லாமல் 24 பேருக்கும், வாகனங்களில் பயணம் செய்யும்போது 3 பேருக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது. அதே நேரம் நேற்று ஒரே நாளில் 17 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,164 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 19 பேர் இறந்துள்ளனர். 726 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றுள்ள நிலையில், தற்போது 419 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story