கொரோனாவால் சுதந்திர தினவிழா எளிமையாக நடக்கிறது எடியூரப்பா, நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்


கொரோனாவால் சுதந்திர தினவிழா எளிமையாக நடக்கிறது எடியூரப்பா, நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 14 Aug 2020 2:49 AM IST (Updated: 14 Aug 2020 2:49 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தினவிழா நாளை (15-ந்தேதி) எளிமையாக கொண்டாடப்படுகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி மானேக்‌ஷா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு இருப்பதாக ஏற்கனவே பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக நாளை நடைபெறும் சுதந்திர தினவிழாவில் குறைந்த அளவிலானவர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிலையில், பெங்களூரு மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நாளை நடைபெறும் சுதந்திர தினவிழாவுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

எடியூரப்பாகொடி ஏற்றுகிறார்

சுதந்திர தினவிழா ஆண்டுதோறும் பெங்களூரு மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தினவிழா எளிமையாக கொண்டாடப்படுகிறது. அதனால் போலீசாரின் சாகச நிகழ்ச்சிகள், போலீசாரின் அணிவகுப்பு, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை எதுவும் நடைபெறாது. மானேக்‌ஷா மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் காலை 9 மணியளவில் முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார். தேசிய கொடி ஏற்றும் போது இந்த முறை ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்படாது. முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடியை ஏற்றி வைத்துவிட்டு, மாநில மக்களுக்காக உரையாற்றுகிறார்.

விழாவுக்கு வரும் முதல்-மந்திரி எடியூரப்பா காலை 8.58 மணியளவில் தேசிய கொடி ஏற்றும் பகுதிக்கு அழைத்து செல்லப்படுவார். இந்த ஆண்டு சுதந்திர தினவிழாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 25 பேர் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக விழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் உடல்வெப்ப நிலை குறித்த பரிசோதனை நடத்தப்படும். விழாவில் கலந்து கொள்பவர்கள் சமூக இடைவெளியுடன் அமர்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

மானேக்‌ஷா மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழாவுக்காக முன் எச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எல்லை பாதுகாப்பு படைவீரர்கள், கருடா போலீஸ் படை, அதிவிரைவு படை, நகர ஆயுதப்படை, கர்நாடக ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு 20 போலீஸ் படைகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட இருக்கிறது.

மைதானத்தை சுற்றி 47 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மைதானத்தில் 500 பேர் கலந்துகொள்வதற்கு தேவையான இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழாவுக்கு வருபவர்கள் முழுமையான பரிசோதனை செய்யப்பட்ட பின்பே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். சுதந்திர தினவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி செய்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மாவட்ட பொறுப்பு மந்திரிகள்

பெங்களூருவை போன்று கர்நாடக மாநிலம் முழுவதும் சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல, மாவட்ட தலைநகர்களில் அந்தந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தேசிய கொடி ஏற்றுவார்கள் என்று கர்நாடக அரசு நேற்று அறிவித்துள்ளது.

சுதந்திர தினவிழாவையொட்டி பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் கடந்த 11-ந்தேதி ஏற்பட்ட வன்முறையால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். 

Next Story