தமிழ்தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம், புதிய கல்வி கொள்கையை கைவிட கோரிக்கை


தமிழ்தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம், புதிய கல்வி கொள்கையை கைவிட கோரிக்கை
x
தினத்தந்தி 14 Aug 2020 3:30 AM IST (Updated: 14 Aug 2020 6:37 AM IST)
t-max-icont-min-icon

புதிய கல்வி கொள்கையை கைவிட கோரி தஞ்சையில் தமிழ்தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயிலடியில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் வைகறை தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன், மாநகர செயலாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராசு.முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளிகளை வெளியேற்ற வேண்டும். தங்கள் தாயகம் திரும்பிய புலம்பெயர்ந்தோரை மீண்டும் அழைத்து வரக்கூடாது. தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 சதவீத வேலையை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். 10 சதவீத்திற்கு மேல் உள்ள வெளிநபர்களை வெளியேற்ற வேண்டும்.

புதிய கல்வி கொள்கை குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் பாடச்சுமைகளை அதிகப்படுத்துகிறது. இது குழந்தை உளவியல், கல்வி உளவியல் ஆகிய இரண்டுக்கும் எதிரானது. ஒட்டுமொத்தமாக புதிய கல்வி கொள்கை தனியார் கொள்ளைக்கு வாய்ப்பளிக்கும். எனவே புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு துறையில் 100 சதவீதமும், தனியார் துறையில் 90 சதவீதமும் தமிழர்களுக்கே வேலை தர வேண்டும். இதற்கான சட்டங்களை தமிழகஅரசு இயற்றி செயல்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்து தமிழ்நாடு வந்தவர்களுக்கு குடும்பஅட்டை, வாக்காளர்அட்டை வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகையன், மகளிர் ஆயம் மாநில அமைப்பாளர் லட்சுமி, மாவட்ட அமைப்பாளர் செம்மலர், மாநகர நிர்வாகி ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பூதலூர் ஒன்றிய தமிழ் தேசிய பேரியக்கத்தின் சார்பில் சாணூரப்பட்டி சாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் தேசிய பேரியக்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தென்னவன், தமிழர் நலம் பேரியக்க நிர்வாகி தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் சந்துரு மற்றும் தமிழ் தேசிய பேரியக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதுக்குடியில் தமிழ் தேசிய பேரியக்கம் பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story