நாளை சுதந்திர தின விழா: தூத்துக்குடியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு


நாளை சுதந்திர தின விழா: தூத்துக்குடியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2020 6:41 AM IST (Updated: 14 Aug 2020 6:41 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திரதின விழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்து உள்ள நெறிமுறைகளை கடைபிடித்து விழா நடக்கிறது. விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் நுழைவு வாயிலில் உரிய சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 96 முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தீவிர சோதனை

அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் ரோந்துப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 18 நெடுஞ்சாலை போலீஸ் ரோந்தும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் 38 சிறப்பு ரோந்து படையும் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்பநாய் படை பிரிவினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று தூத்துக்குடி மாவட்ட எல்லைப்பகுதிகளில் 18 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை சோதனை செய்யும் பணி நடந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வன், கோபி ஆகியோர் உடன் இருந்தனர்.

கடல் பகுதியில் கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடலோர பாதுகாப்பு போலீசார் ரோந்து படகு மூலம் கடலோர பகுதிகளில் ரோந்து சென்றனர். தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு சென்று பயங்கரவாதிகள் ஊடுருவல் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். மீன்பிடி படகுகளிலும் தீவிர சோதனை செய்தனர். மீனவர்களின் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரம் உள்ள மீனவ கிராமங்களிலும் கடலோர பாதுகாப்பு போலீசார் ரோந்து சென்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர்.

Next Story