வேலூர் மாவட்டத்தில் சீட் பெல்ட், ஹெல்மெல்ட் அணியாத 1¾ லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு
வேலூர் மாவட்டத்தில் சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாத 1¾ லட்சம் பேர் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்ற விவரங்கள் முதற்கட்டமாக கணக்கெடுக்கப்பட்டன. பின்னர் அந்த பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக செல்வதற்காக இரும்பு தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள், விட்டு விட்டு ஒளிரும் சிக்னல்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட், காரில் பயணம் செய்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும், வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
சாலை விபத்துகளை குறைக்க மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.
வழக்குப்பதிவு
அதன்பேரில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் உட்கோட்ட போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம், ஒழுங்கு போலீசார் முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை ஹெல்மெட் அணியாத 1 லட்சத்து 54 ஆயிரத்து 434 பேர், சீட் பெல்ட் அணியாத 34 ஆயிரத்து 338 பேர் என்று 1 லட்சத்து 88 ஆயிரத்து 772 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதைதவிர அதிவேகமாக ஓட்டிய 3,980 பேர் மீதும், சிக்னல் கோட்டை தாண்டிய 8 ஆயிரம் பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 13,132 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 762 பேர் மீதும், அதிகபாரம், அதிக உயரமாக பொருட்கள் ஏற்றி சென்றது உள்பட 34,581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 22,031 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story