ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம் 98 அடியாக உயர்வு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம் 98 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 14 Aug 2020 3:45 AM IST (Updated: 14 Aug 2020 7:50 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 98 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர், 

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன்காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. கடந்த 10-ந் தேதி இந்த இரு அணைகளில் இருந்தும் அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மழையின் அளவு குறைந்ததால் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

இதன்காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இதனால் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரத்து 917 கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 704 கனஅடியும் என மொத்தம் வினாடிக்கு 29 ஆயிரத்து 621 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. குறிப்பாக தமிழக-கர்நாடக எல்லையையொட்டி உள்ள ஆலம்பாடியில் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தமிழகத்திற்கு வரும் நீர்வரத்தை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து அளவீடு செய்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து கூடுவதும், குறைவதுமாக உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவாய்த்துறை மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை காண முடியவில்லை என ஒகேனக் கல்லுக்கு வழக்கமாக சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து நேற்று அதிகரித்ததை தொடர்ந்து மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக சற்று உயர்ந்தது. பின்னர் நேற்று இரவு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் அணை நீர்மட்டம் கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், நீர்வரத்து குறைவால் நேற்று குறைந்த அளவே உயர்ந்துள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் 97.31 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 98 அடியாகஉயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால் அணை நீர்மட்டம் சீராக உயரும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இதே மழை அடுத்த சில நாட்களுக்கு நீடித்தால் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Next Story