மாவட்டத்தில் ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1,112 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 34 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,112 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 1,064 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 14 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,078 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே நேற்று மேலும் 34 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று நாமக்கல்லை சேர்ந்த 4 பேர், திருச்செங்கோடு, வரகூர், பள்ளிபாளையம் பகுதிகளை சேர்ந்த தலா 3 பேர், குமாரபாளையம் மற்றும் தண்ணீர்பந்தல்காடு பகுதியை சேர்ந்த தலா 2 பேர், வெப்படை, எருமப்பட்டி, ஒலப்பாளையம், மங்களபுரம், உடையார்பாளையம், வெள்ளக்கல்பட்டி, நாமகிரிப்பேட்டை, சிங்கியன்கோம்பை, கோனேரிப்பட்டி, பொத்தனூர், மல்லசமுத்திரம், ஆலாம்பாளையம், வெடியரசம்பாளையம், கண்டிபுதூர், சோழசிராமணி, ராசாம்பாளையம், ஆண்டகளூர்கேட் பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,112 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், பரமத்திவேலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 64 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 819 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 18 பேர் பலியாகி உள்ள நிலையில், மீதமுள்ள 275 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story