ராணிப்பேட்டை மாவட்டத்தில், உழவர் உற்பத்தியாளர், தொழில் குழுக்களுக்கு ரூ.1½ கோடி சிறப்பு நிதி உதவி - கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்


ராணிப்பேட்டை மாவட்டத்தில், உழவர் உற்பத்தியாளர், தொழில் குழுக்களுக்கு ரூ.1½ கோடி சிறப்பு நிதி உதவி - கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்
x
தினத்தந்தி 13 Aug 2020 9:45 PM GMT (Updated: 14 Aug 2020 4:34 AM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர், தொழில் குழுக்களுக்கு ரூ.1½ கோடி சிறப்பு நிதி உதவியை கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்.

ராணிப்பேட்டை,

தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் உலக வங்கி நிதி உதவியோடு செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் ஊரக தொழில் முனைவுகளை மேம்படுத்துதல், நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குதல் போன்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, காவேரிப்பாக்கம், சோளிங்கர் மற்றும் நெமிலி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 207 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் கோவிட்-19 சிறப்பு நிதியுதவி தொகுப்பு உருவாக்கப்பட்டு, இதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஊரக தொழில்களை மேம்படுத்தும் வகையில், ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்தினரால் நடத்தப்படும் தொழில்களுக்கும், மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோருக்கும் வருவாய் ஈட்டும் வகையில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள், உழவர் உற்பத்தி நிறுவனங்களில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் தொழில்களின் மூலம் வளமும், வலிமையும் பெறுவதற்கு ஊரக புத்தாக்க திட்டத்தில் சிறப்பு நிதி தொகுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி, மாவட்டத்தில் உள்ள 90 குழுக்களுக்கு ரூ.1 கோடியே 35 லட்சமும், 10 தொழில் குழுக்களுக்கு ரூ.15 லட்சமும் ஆக மொத்தம் ரூ.1½ கோடி கொரோனா சிறப்பு நிதி உதவியை வழங்கினார். ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் எஸ்.தமிழ்மாறன் திட்ட விளக்க உரையாற்றினார். மேலும் மானிய நிதியின் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி பார்வையிட்டார்.

Next Story