சென்னையை சேர்ந்த புரோகிதர்களின் கார் கண்ணாடியை உடைத்து 15 பவுன் நகை, வைரம் திருட்டு - குருவின் அஸ்தியை கரைக்க வந்த போது சம்பவம்
குருவின் அஸ்தியை கரைக்க வந்த இடத்தில், புரோகிதர்களின் கார் கண்ணாடியை உடைத்து 15 பவுன் நகை, வைரம் மற்றும் பணம் திருட்டு போனது.
ஜீயபுரம்,
சென்னை கீழ்கட்டளை பூபதிநகரை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன் (வயது 36). இவரது நண்பர்கள் வைத்தியநாதன்(34), வெங்கடேசன்(31). இவர்கள் புரோகிதர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் குரு விக்ரமன்சாமி இறந்து விட்டார். அவரது அஸ்தியை ராமேசுவரத்தில் கரைக்க வேண்டும் என முடிவெடுத்து, மூவரும் நேற்று முன்தினம் ஒரு காரில் சென்னையில் இருந்து ராமேசுவரம் புறப்பட்டு வந்தனர்.
திருச்சி-மதுரை புறவழி சாலையில் வந்த போது காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதை கண்டனர். இ-பாஸ் பெறாமல் வந்ததால், வழியில் சிக்கல் ஏற்படும் என்று கருதிய அவர்கள், அஸ்தியை காவிரி ஆற்றில் கரைத்துச்செல்ல திட்டமிட்டனர். இதற்காக ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்துக்கு சென்றனர். அங்கு காவிரி ஆற்றில் காரியங்கள் செய்ய தடை விதித்து இருப்பதை அங்கிருந்த போலீசார் எடுத்து கூறி அவர்களை திருப்பி அனுப்பினர்.
இதனால் அவர்கள் ஜீயபுரம் அருகே முருங்கைபேட்டைக்கு சென்று, காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு ஆற்றுக்கு சென்றனர். அங்கு அஸ்தியை கரைத்துவிட்டு திரும்பி வந்து பார்த்த போது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் காரில் அவர்கள் வைத்து சென்ற 15 பவுன் நகை, முக்கால் காரட் எடையுள்ள 20 வைர கற்கள், ரூ.20 ஆயிரம் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது.
சாலையோரம் கார் தனியாக நிற்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி, கார் கண்ணாடியை உடைத்து அவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story