கொரோனா குறித்து குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் - மகளிர் குழுவினருக்கு கலெக்டர் ஆலோசனை
கொரோனா தொற்று குறித்து குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மகளிர் குழுவினருக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஸ்ரீ மதுரை ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அரசின் திட்டங்களை எடுத்து கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் தொடங்க பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. மகளிர் குழு உறுப்பினர்கள் மகளிர் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று காலமாக உள்ளதால் தங்கள் வீட்டில் உள்ள நபர்கள் மற்றும் தங்களது குழு உறுப்பினர்களிடம் அடிக்கடி கைகளை கழுவுதல், தன் சுத்தம் மற்றும் முககவசம் அணிதல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளிப்பவர்கள் விவரங்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படும். கடன் உதவி பெறும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உரிய காலத்தில் கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டும். அரசின் திட்டங்கள் பெறுவது தொடர்பாக தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலரை தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டறிந்து பெண்கள் தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மகளிர் திட்ட அலுவலர் பாபு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story