ஈரோட்டில் பாதாள சாக்கடை பணியின் போது மண்சரிந்து தொழிலாளி பரிதாப சாவு
ஈரோட்டில் பாதாள சாக்கடை பணியின் போது மண்சரிந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு,
ஈரோடு நேதாஜி ரோடு முனிசிபல் சத்திரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் சுமார் 15 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர்.
ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் பகுதியை சேர்ந்த சின்ராசு என்பவரது மகன் ஆனந்த் (வயது 24) என்பவர் குழிக்குள் இறங்கி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து அவர் மீது விழுந்தது. குழி முழுவதுமாக மூடியதால் அவர் வெளியில் வரமுடியாதபடி மண்ணுக்குள் புதைந்து சிக்கிக்கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மண்சரிவில் சிக்கிய ஆனந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணிக்காக பொக்லைன் எந்திரம் பயன்படுத்தப்பட்டது. மீட்பு பணி நடக்கும் பகுதியில் 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.
சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு ஆனந்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அப்போது 108 ஆம்புலன்சு மருத்துவ குழுவினர் ஆனந்தின் உடலை பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மண் சரிவில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story