பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் சுதந்திர தினவிழா எடியூரப்பா இன்று தேசிய கொடி ஏற்றுகிறார்


பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் சுதந்திர தினவிழா எடியூரப்பா இன்று தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 15 Aug 2020 2:39 AM IST (Updated: 15 Aug 2020 2:39 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் சுதந்திர தினவிழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார். சுதந்திரதினத்தையொட்டி கர்நாடக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரு, 

நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூரு மாநகராட்சி சார்பில் மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக 500 பேர் மட்டுமே சுதந்திர தினவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போலீசாரின் சாகசம், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறுவதில்லை.

முதல்-மந்திரி எடியூரப்பா காலை 8.58 மணியளவில் விழா மேடைக்கு அழைத்து வரப்படுகிறார். பின்னர் காலை 9 மணியளவில் முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் வானில் பறந்தபடி ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் எதுவும் தூவப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை மட்டும் முதல்-மந்திரி எடியூரப்பா ஏற்று கொள்கிறார். அதைத்தொடர்ந்து, மாநில மக்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உரையாற்ற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இதுபோல, ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும் அந்தந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளனர். கொரோனா பாதிப்பு இருப்பதால் சுதந்திர தினவிழாவின் போது முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. பெங்களூருவில் சுதந்திர தினத்தையொட்டி விழா நடைபெறும் மானேக்‌ஷா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயுதப்படை போலீசார் உள்பட 800-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அதுபோல, பெங்களூரு நகர் முழுவதும் முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையத்திற்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பெங்களூருவை போன்று மாநிலம் முழுவதும் சுதந்திர தினத்தையொட்டி முன் எச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அமர்குமார் பாண்டே தெரிவித்துள்ளார். 

Next Story