‘சிறுபான்மையினர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டது நான் தான்’ கைதான நவீன் பரபரப்பு வாக்குமூலம்
சிறுபான்மையினர் குறித்து முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டது நான் தான் என்றும், நான் விளையாட்டாக செய்த காரியத்தால் இவ்வளவு பெரிய வன்முறை நடந்துவிட்டதே எனவும் கைதான நவீன் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு புலிகேசிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் அக்காள் மகன் நவீன் (வயது 27). இவர் சிறுபான்மை சமுதாயத்தினர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்டு இருந்தார். இதனால் கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், காவல் பைரசந்திராவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் குறித்து டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வன்முறை சம்பவம் தொடர்பாக நவீன் உள்பட 146-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் முகநூலில் அவதூறு கருத்து பதிவு செய்தது குறித்து நவீனிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தனது செல்போன் திருட்டு போய் விட்டதாகவும், யாரோ எனது செல்போனை முடக்கி அவதூறு கருத்துகளை பதிவு செய்ததாகவும் போலீசாரிடம் கூறி இருந்தார். இதற்கிடையே கைதான நவீனை, வீடியோ கால் மூலம் பெங்களூரு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி இருந்தனர். அப்போது நவீனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி இருந்தார்.
விளையாட்டாக செய்த....
அதன்படி டி.ஜே.ஹள்ளி போலீசார் நவீனை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அப்போதும் அவர் தனது செல்போன் திருட்டு போய் விட்டதாக கூறினார். இருப்பினும் அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவதூறு கருத்து பதிவிட்டது நான் தான் என்று நவீன் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
சிறுபான்மையினர் சமுதாயம் குறித்து எனது முகநூல் பக்கத்தில் நான் தான் அவதூறு கருத்துகளை பதிவு செய்தேன். அதை விளையாட்டாக தான் செய்தேன். நான் அவதூறு கருத்து பதிவு செய்ததும் எனக்கு செல்போனில் மிரட்டல்கள் வந்தன. இதனால் நான் பயந்து போய் அந்த பதிவை உடனடியாக அழித்து விட்டேன்.
நான் விளையாட்டாக செய்த காரியம் இவ்வளவு பெரிய பிரச்சினை ஆகும் என்று நினைக்கவில்லை என்றும், எனது செயலால் வன்முறை நடந்துவிட்டதே என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நவீனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நவீன் செல்போன் திருடு போய் விட்டதாக நவீன் கூறி வருவதால் அந்த செல்போனை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story