சிரா தொகுதி இடைத்தேர்தலில் நிகில் குமாரசாமியை வேட்பாளராக நிறுத்த முடிவு?
சிரா தொகுதி இடைத்தேர்தலில் நிகில் குமாரசாமியை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு,
துமகூரு மாவட்டம் சிரா தொகுதியின் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தவர் சத்ய நாராயணா. இவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்ய நாராயணா பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிர் இழந்தார். இதனால் அந்த தொகுதி தற்போது காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள அந்த தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.
இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பாகவே சிரா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற பேச்சு தற்போதே தொடங்கி விட்டது. குறிப்பாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மகனான நிகில் குமாரசாமியை வேட்பாளராக நிறுத்துவது குறித்து, அவரது குடும்பத்தினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு நிகில் குமாரசாமி தோல்வி அடைந்திருந்தார்.
தேவேகவுடா இறுதி முடிவு
அதே நேரத்தில் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவின் மகனான பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இதன் காரணமாக நிகில் குமாரசாமியை சிரா தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்த, அவரது குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். இதுபற்றி ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவின் கவனத்திற்கும் குடும்பத்தினர் கொண்டு சென்றிருப்பதாக தெரிகிறது. ஆனால் சிரா தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகததால், அதுபற்றி தேவேகவுடா எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு குமாரசாமி மற்றும் கட்சியின் மற்ற தலைவர்களுடன் ஆலோசித்து நிகில் குமாரசாமியை வேட்பாளராக நிறுத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து தேவேகவுடா தான் இறுதி முடிவு எடுப்பார் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story