நிலச்சரிவில் புதைந்த அர்ச்சகர் குடும்பம்: மேலும் ஒருவரின் உடல் மீட்பு மந்திரி சோமண்ணா நேரில் பார்வையிட்டார்
குடகில் ஏற்பட்ட நிலச்சரிவில் அர்ச்சகரின் குடும்பம் புதைந்தது. இதில் அர்ச்சகரின் உடல் மற்றும் அவருடைய அண்ணனின் உடல் மீட்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. சம்பவ இடத்தை மந்திரி சோமண்ணா நேரில் பார்வையிட்டார்.
குடகு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மலைநாடான குடகு மாவட்டத்தில் பருவமழை இந்த ஆண்டும் கொட்டி தீர்த்தது. இதனால் அந்த மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக தலைக்காவிரி அருகே பிரம்மகிரி மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், அடிவாரத்தில் இருந்த 2 வீடுகள் சிக்கி முற்றிலும் புதைந்தன. அதில் ஒரு வீட்டில் ஆள் இல்லை. மற்றொரு வீட்டில் தலைக்காவிரி கோவிலின் பிரதான அர்ச்சகர் நாராயண ஆச்சார், அவருடைய அண்ணன் ஆனந்த தீர்த்த ஆச்சார், நாராயண ஆச்சாரின் மனைவி மற்றும் 2 அர்ச்சகர்கள் இருந்துள்ளனர்.
அவர்கள் 5 பேரும் பரிதாபமாக மண்ணில் புதைந்து பலியானார்கள். இந்த சம்பவம் கடந்த 6-ந் தேதி நடந்தது. இதையடுத்து அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் அதிநவீன எந்திரம் மற்றும் பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும் ஒருவர் உடல் மீட்பு
அதன்பயனாக கடந்த 9-ந் தேதி நாராயண ஆச்சாரின் அண்ணனின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் கடந்த 11-ந் தேதி அர்ச்சகர் நாராயண ஆச்சாரின் உடல் மீட்கப்பட்டது. மேலும் மண்ணில் புதைந்திருந்த நாராயண ஆச்சாருக்கு சொந்தமான நாய், 2 கார்கள், ஆவணங்கள், ஆடைகள் போன்றவையும் மீட்கப்பட்டன. மேலும் 10 மாடுகளின் உடல்களும் மீட்கப்பட்டது. இந்த நிலையில் நாராயண ஆச்சாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மற்றொரு உடல் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் அது ஆணின் உடலா?, பெண்ணின் உடலா? என்று கண்டறியப்பட முடியாமல் சிதைந்துள்ளது. இதையடுத்து அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு மீட்பு குழுவினர் அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்த மாவட்ட பொறுப்பு மந்திரி சோமண்ணா, பிரதாப் சிம்ஹா எம்.பி., மாவட்ட கலெக்டர் அனீஸ் கண்மணி ஜாய், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
342 வீடுகள் இடிந்தன
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது மந்திரி சோமண்ணா கூறியதாவது:-
குடகு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணில் புதைந்த நாராயண ஆச்சார் மற்றும் அவருடைய அண்ணன் ஆனந்த தீர்த்த ஆச்சார் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று(அதாவது நேற்று) இன்னொரு உடல் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட வேண்டி உள்ளன. இந்த சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆகிவிட்டது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. குடகு மாவட்டத்தில் கனமழையால் ரூ.4 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 12 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. 60 இடங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. 342 வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளன. 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 700 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
38 ஆயிரம் ஏக்கர்...
மழையால் இதுவரை 38 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நாசமாகி உள்ளன. நாராயண ஆச்சார் பலியானதால் தலைக்காவிரியில் உள்ள கோவிலில் பூஜைகள் ஏதும் நடைபெறாது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அது தவறான தகவல். இன்று(அதாவது நேற்று) முதல் தலைக்காவிரி கோவிலில் பூஜை தொடங்கப்பட்டு உள்ளது. இனி தொடர்ந்து தலைக்காவிரி கோவிலில் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மந்திரி சோமண்ணா தலைக்காவிரி கோவிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டார். அவருடன் பிரதாப் சிம்ஹா எம்.பி. உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story