‘மக்களுக்கு அரசு தந்த சுதந்திர தின பரிசு’ ரோடியர் மில் மூடப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
ரோடியர் மில் மூடப்பட்டு இருப்பது மக்களுக்கு அரசு தந்த சுதந்திர தின பரிசு என புதுவை அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
புதுச்சேரி,
புதுவையின் அடையாளமாக விளங்கிய நூற்றாண்டு பழமை வாய்ந்த ரோடியர் மில் மூடப்பட்டதாக அரசு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
அன்பழகன்
சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.:-
புதுவையில் தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசின் கொள்கை முடிவின்படி நூற்றாண்டுக்கும் மேலான பழமைவாய்ந்த ரோடியர் மில்லை மூடி சுதந்திர தின பரிசாக மக்களுக்கு அறிவித்துள்ளது. இந்த அரசு தொழிலாளர்களுக்கும், மாநில பொருளாதார வளர்ச்சிக்கும், துரோகம் இழைத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதமே ரோடியர் மில்லை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவு எடுத்துவிட்டது. மூடுவிழா சம்பந்தமான நடவடிக்கையை அரசு அதிகாரிகள் தொடர்ந்தபோது மக்களை ஏமாற்ற முதல்-அமைச்சர் தலைமையில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தி இந்த மில்லை மூடவிடமாட்டோம் என்று வீரவசனம் பேசினார்கள்.
தொழிலாளர்களுக்கு வரும் இழப்பீட்டு தொகையில் தற்போதைய தொழில்தாவா சட்டத்தின்படி விருப்ப ஓய்வு இழப்பீட்டில் பாதித் தொகை கூட தொழிலாளர்களுக்கு கிடைக்காத நிலையை ஆளும் அரசுடன் இணைந்து கவர்னரும் எடுத்துள்ளார். ரோடியர் மில்லை மூடும் அரசின் முடிவில் தி.மு.க.வுக்கு பங்கு இல்லையா? இந்த முடிவுக்கு தி.மு.க.வுக்கு தெரியாதா? அப்படி இருந்தால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் வகிக்கும் வாரிய தலைவர் பதவிகளை ராஜினாமா செய்து தங்கள் தன்மானத்தை காப்பாற்ற முன்வருவார்களா?
சிவா
சட்டமன்ற தி.மு.க. தலைவரும், தெற்கு மாநில அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ.:-
ரோடியர் மில் மூடப்பட்டுள்ளதாக அறிவித்து இருப்பது தொழிலாளர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சருக்கு தெரியாமல் அரசுக்கு சொந்தமான மில்லின் நிர்வாக இயக்குனர் இந்த அறிவிப்பை வெளியிடுவது எப்படி சாத்தியமாகும்? 4 மாதமாக மில் மூடப்பட்டதை ஏன் அரசு வெளியே தெரிவிக்காமல் மூடி மறைத்து வைத்தது?
ரோடியர் மில்லை தொடர்ந்து பாரதி, சுதேசி மில்களும் மூடப்பட்டுவிடுமோ? என்ற எண்ணம் தொழிலாளர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. எந்த பஞ்சாலைகளையும் மூடுவதற்கு தி.மு.க. அனுமதிக்காது. புதுவையில் கவர்னர் விருப்பம்தான் அமலில் வரும் என்றால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ‘டம்மி’ முதல்-அமைச்சர் பதவி எதற்கு? சட்டமன்ற தேர்தல் எதற்கு? எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு கவர்னர் அரசியல் செய்கிறார் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
கவர்னரின் அரசியலை எதிர்கொண்டு மக்களுக்கு அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முதல்-அமைச்சர் முன்வரவேண்டும். இல்லையென்றால் அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவியை ராஜினாமா செய்து மக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனை காக்க முன்வரவேண்டும்.
எஸ்.பி.சிவக்குமார்
புதுவை வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார்:-
ரோடியர் மில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நாள் புதுவை வரலாற்றின் கறைபடிந்த கருப்பு நாட்களில் ஒன்று. இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் அரசின் கொள்கை முடிவின்படி நெசவாலையின் அனைத்து யூனிட்டுகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எந்த அரசு? எந்த கொள்கை முடிவின்படி யார் உத்தரவில் இந்த மில்லை மூடுகிறார்கள்? என்று தெரியவில்லை.
அமைச்சரவை எப்போது முடிவெடுத்தது? என்றும் தெரியவில்லை. மில்லை மூடுவதற்காகவா நாம் அரசியலில் உள்ளோம்? அதற்காகவா மக்கள் நம்மை சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் அனுப்பி வைக்கிறார்கள்? மக்களை காப்பாற்ற முடியாத அரசும், அமைச்சரவையும், சட்டமன்றமும் இருந்து என்ன பயன்? எங்களின் உயிரைப்போன்ற மில்களை உங்களது கவனக்குறைவினால் மூடாதீர்கள் என ஆளும் அதிகார வர்க்கத்தினை கேட்டுக்கொள்கிறேன்.
வையாபுரி மணிகண்டன்
அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ.:-
இரும்பு மனமும், இளகாத குணமும் கொண்டவர்கள் புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியினர் என்பதற்கு இதைவிட வேறு சான்று இருக்க முடியாது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வாய்ப்புள்ள ரோடியர் மில் மூடப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வேதனையானது. அரசு தனது நிர்வாக திறமையின்மையை, அரக்க குணம் கொண்ட சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது. இவர்கள் இனியும் பதவியில் நீடிக்கக்கூடாது. இதற்கும் பிறர் மீது பழிபோட்டு தப்பிவிட முடியாது.
பஞ்சாலையை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும். மூடும் முடிவினை அமல்படுத்த முயன்றால் மக்கள் துணையோடு கட்சி தலைமையின் அனுமதிபெற்று அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும். அரசுக்கு தக்க நேரத்தில் தகுந்த பாடத்துடன் புதுச்சேரி மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
வேல்முருகன்
அ.ம.மு.க. மாநில செயலாளர் வேல்முருகன்:-
ரோடியர் மில்லை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்திருப்பது மிகப்பெரிய கொடுமையானது. மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசு முற்றிலும் செயலிழந்து மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. பஞ்சாலையை மூடிவிட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை எப்படி உருவாக்கப்போகிறது என்பதை இந்த அரசு தெரியப்படுத்த வேண்டும்.
மக்களைப்பற்றி சிறிதும் கவலைப்படாத கவர்னரின் வழியிலே இந்த அரசும் பயணித்தால் புதுச்சேரி மக்களால் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட இந்த அரசு ஆட்சியில் இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே மேல். கொள்கை முடிவு என்றால் பல ஆயிரம் பேரை வாழ வைப்பதாக இருக்கவேண்டும். அதை விடுத்து பொதுமக்களை பாதாள குழியில் தள்ளும் முடிவு ஒரு கொள்கை முடிவா? என்பதையும் ஆளும் வர்க்கத்தினர் உணரவேண்டும். பஞ்சாலையை மூடும் முடிவை கைவிட்டு மத்திய அரசுடன் போராடி நிதியினை பெற்று பஞ்சாலையை சிறப்புடன் நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story