உப்பளம் மைதானத்தில் சுதந்திரதின விழா: நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார்


உப்பளம் மைதானத்தில் சுதந்திரதின விழா: நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 16 Aug 2020 5:22 AM IST (Updated: 16 Aug 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

புதுவை உப்பளம் மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி, 

புதுவை உப்பளம் மைதானத்தில் நேற்று சுதந்திர தின விழா நடந்தது. இதையொட்டி விழா மைதானத்துக்கு காலை 8.58 மணியளவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி வந்தார். அவரை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர். நேராக விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசியகீதம் இசைத்தனர்.

தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பினை நாராயணசாமி பார்வையிட்டார். அதன்பின் சுதந்திரதின உரையாற்றினார். உரையாற்றி முடிந்ததும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அரசு துறைகளுக்கு கேடயங்களை வழங்கினார்.

அதன்பின் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

பொதுமக்கள் கூட்டமில்லை

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் சுமார் 400 பேர் அளவுக்கே முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். விழாவினை காணவந்த பொதுமக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது.

விழாவில் சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், சிவா, வெங்கடேசன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உப்பளம் மைதானத்தில் விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேராக சட்டசபைக்கு வந்தார். சட்டசபை வளாகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மரக்கன்றுகளையும் நட்டார். நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக் கொழுந்து, அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் அலுவலகம்

முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட முதல்- அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து சேவாதள பிரிவினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், துணைத்தலைவர் நீல.கங்காதரன் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.


Next Story