செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் ஜான் லூயிஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு தொழிற்பேட்டை மைதானத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தேசியகொடியை ஏற்றி வைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் தமிழக முதல்- அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து கொரோனா தொற்று தடுப்பு பணியில் உயிரிழந்த மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் சுகுமாரன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சமும், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தூய்மை பணியாளர் நடராஜன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சமும் நிவாரண நிதி வழங்கினார்.
பாராட்டு சான்றிதழ்
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, தையல் எந்திரம் வேளாண்மை இடுபொருட்கள், விசைத்தெளிப்பான், மின்மோட்டார், டிராக்டர் என மொத்தம் ரூ.29 கோடியே 63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியதற்காக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இதனையடுத்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டீன் சாந்தி மலர், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், வருவாய் துறை சார்பில் கொரோனா தொற்றின்போது சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story