புதிதாக அமைத்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதி கோரி மறியல் போக்குவரத்து பாதிப்பு


புதிதாக அமைத்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதி கோரி மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 Aug 2020 6:10 AM IST (Updated: 16 Aug 2020 6:10 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே புதிதாக அமைத்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதி கோரி மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை, 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி ஊராட்சி எல்லைக்கு உட்பட்டு தொம்பரம்பேடு, பாலரெட்டிகண்டிகை, ஆலங்காடு கிராமங்கள் உள்ளன. இதில் தொம்பரம்பேடு கிராம எல்லையில் 140 ஏக்கர் நிலபரப்பில் அரசு நிலம் உள்ளது. இங்கு தொம்பரம்பேடு கிராமத்தை சேர்ந்த கால்நடைகள் மேய்ந்து வந்தன. இந்த நிலையில் இங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாராட்சி கிராம பொதுமக்கள் நன்கொடை வசூலித்து தொம்பரம்பேடு கிராம எல்லையில் 10 ஏக்கர் பரப்பளவில் கிரிக்கெட் மைதானம் அமைத்தனர்.

போராட்டம்

கிரிக்கெட் மைதானம் அமைத்தால் தங்கள் கிராமத்தை சேர்ந்த கால்நடைகள் எங்கு சென்று மேயும் என்று கேள்வி எழுப்பியவாறு தொம்பரம்பேடு கிராம மக்கள் கடந்த 12-ந் தேதி கிரிக்கெட் மைதானத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த தாராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி தலைமையிலான போலிசார் அங்கு விரைந்து சென்று இரு தரப்பினரை அழைத்து சமரச பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.

கிரிக்கெட் மைதானம் அமைக்கும் இறுதி கட்ட பணிகளை தொடர கூடாது என்றும், கிரிக்கெட் விளையாட கூடாது என்றும் கூறினர்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று மாலை தாராட்சி கிராமத்தினர் புதிதாக அமைத்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதி கோரி ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை தாசில்தாார் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி ஆகியோர் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை-யில் ஈடுபட்டனர். இது குறித்து நாளை (திங்கட்கிழமை) இரு கிராமத்தினர் இடையே சமரச பேச்சுவார்தை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர்.

அதன் பேரில் சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. மறியல் காரணமாக ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் இடையே ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story