தூத்துக்குடியில் சுதந்திர தினவிழா கலெக்டர் தேசிய கொடியேற்றினார் ரூ.2¼ கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்


தூத்துக்குடியில் சுதந்திர தினவிழா கலெக்டர் தேசிய கொடியேற்றினார் ரூ.2¼ கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
x
தினத்தந்தி 16 Aug 2020 7:09 AM IST (Updated: 16 Aug 2020 7:09 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.2¼ கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி காலை 9 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்குக்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர்(வருவாய்) விஷ்ணுசந்திரன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியை ஏற்றி வைத்து புறாக்கள், வண்ண பலூன்களை பறக்க விட்டார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழாவில் சிறப்பாக பணியாற்றிய 8 போலீசாருக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் 114 பேருக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

நலத்திட்ட உதவி

பின்னர் வருவாய் துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) மூலம் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரணம் மற்றும் முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவித்தொகை 9 பேருக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரம், மகளிர் திட்டத்தின் மூலம் வங்கி பெருங்கடன் மற்றும் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 152 பயனாளிகளுக்கு ரூ.78 லட்சத்து 55 ஆயிரம் மானியம் கடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சிறப்பு நிதி 29 குழுக்களுக்கு ரூ.43 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் தொகைக்கான மானியம் 4 பேருக்கு ரூ.45 லட்சத்து 73 ஆயிரம் உள்பட மொத்தம் 222 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளி கடைபிடித்து விழா நடந்தது. அதே போன்று கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. தியாகிகளை அந்தந்த பகுதியில் உள்ள தாசில்தார்கள், அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கவுரவப்படுத்தினர்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அமுதா (பொது), பாலசுப்பிரமணியன் (வளர்ச்சி), பாலசுப்பிரமணியம்(வேளாண்மை), கிறிஸ்டி (கணக்கு), கூட்டுறவு இணை பதிவாளர் ரமணிதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story