சுதந்திர தினவிழவில், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தேசிய கொடியேற்றினார் - 516 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள்
சுதந்திர தினவிழாவில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தேசிய கொடியேற்றினார். விழாவில் 516 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் கிராமத்தில் உள்ள ஆயுதப்படை காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று சுதந்திர தினவிழா நடந்தது. விழாவுக்கு திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி, மரியாதைச் செலுத்தி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகளில் ஊரடங்கு பாதுகாப்புப் பணி, நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கும் பணி, தூய்மைப் பணி, வீடு வீடாகச் சென்று பொதுமக்களை தொற்று குறித்து ஆய்வு செய்த பணி ஆகியவை உள்பட பல்வேறு பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய வருவாய்த்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் மேற்கொண்ட தன்னலமற்ற பணியை போற்றும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் 99 அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகப் பணியாற்றுவதற்கான பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப்பணிகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களான கொரோனா கட்டுப்பாட்டு மாவட்ட அதிகாரி டாக்டர் பி.சுமதி, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் எஸ்.திலீபன் ஆகியோருக்கு வாழ்த்துகளை கூறி, பாராட்டுச் சான்றிதழ், 516 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவன்அருள் வழங்கினார்.
விழாவில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை மகேஷ்பாபு, மகளிர் திட்ட இயக்குனர் மகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், சப்-கலெக்டர் அப்துல் முனிர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் திருப்பத்தூரில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் சிவன்அருள் தேசிய கொடியேற்றினார். அப்போது திருப்பத்தூர், வாணியம்பாடி கல்வி மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளிகளில் படித்து முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ், இனிப்புகளை வழங்கினார்.
விழாவில் பொதுப்பணித்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய உதவி பொறியாளர் ரவி, குணசேகரன், ராஜேந்திரன், அஸ்வின், சரவணகுமார் ஆகியோருக்கு கலெக்டர் சிவன்அருள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளை வழங்கினார்.
Related Tags :
Next Story