ராணிப்பேட்டையில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடியேற்றினார் - பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி நலத்திட்ட உதவிகள்


ராணிப்பேட்டையில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடியேற்றினார் - பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 15 Aug 2020 10:00 PM GMT (Updated: 16 Aug 2020 1:54 AM GMT)

ராணிப்பேட்டையில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் திவ்யதர்ஷினி தேசிய கொடியேற்றினார். அப்போது கலெக்டர், பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சிப்காட்(ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது. விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி பங்கேற்று தேசிய கொடியையேற்றி வைத்து, மரியாதை செலுத்தி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். அதன் மூலம், புதிதாக மாவட்டம் தொடங்கி தேசிய கொடியேற்றிய முதல் கலெக்டர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

பின்னர் கொரோனா தொற்று தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு உயிரிழந்த ஓய்வுபெற்ற ராணுவவீரரான சோளிங்கரை அடுத்த டி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன், ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியின்போது உயிரிழந்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த நர்சு அர்ச்சனா, அரக்கோணம் தாலுகா பெருமுச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியின்போது உயிரிழந்த தேன்மொழி ஆகியோரின் குடும்பத்தினருக்கு அவர்களின் சேவையை பாராட்டி கலெக்டர் திவ்யதர்ஷினி சான்றிதழ் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து கொரோனா தொற்று தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரத்துறை, போலீஸ் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, தன்னார்வலர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்களுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

நாட்டுக்கோழி வளர்ப்பு, மாட்டுப்பண்ணை, காலணி விற்பனை கடை, மகளிர் சுய உதவிக்குழு கடன் உள்பட ரூ.1 கோடியே 59 லட்சத்து 85 ஆயிரத்து 839 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

விழாவில் கொக்கலி ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், யோகா பயிற்சி உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், ஊரக வளர்ச்சி கூடுதல் கலெக்டர் உமா, உதவி கலெக்டர் இளம்பகவத், ராணிப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story