கள்ளக்குறிச்சி அருகே, டுவிட்டரில் பதிவிட்டு என்ஜினீயர் தற்கொலை - குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் ஆறுதல்
கள்ளக்குறிச்சி அருகே, டுவிட்டரில் பதிவிட்டு என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் போனில் ஆறுதல் தெரிவித்தார்.
கண்டாச்சிமங்கலம்,
ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பாலமுருகன்(வயது 23). என்ஜினீயரான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் தியாகதுருகத்தில் உள்ள தனது அக்கா உஷா வீட்டில் இருந்து வந்த பாலமுருகன் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவர் நடிகர் விஜயின் ரசிகர் ஆவார். டுவிட்டர் பக்கத்தில் பாலா விஜய் என்கிற கணக்கை வைத்து, இருந்தார். இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைவனின் மாஸ்டர் படத்தையும், தலைவனையும் பார்க்காமலே போகிறேன் என்று பதிவிட்டு இருந்தார். மேலும் எதுக்கு பிறக்கணும், யாருக்காக நாம வாழனும், அப்போ, சந்தோஷத்தை கொடுத்துவிட்டு பறிச்சிக்கிட்டே இருக்கான் அந்த கடவுள், இதுக்கு மேல என்னால் முடியாதுடா மொத்தமா போய்விடுகிறேன், அப்போவாது எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம் என்று பல்வேறு பதிவுகளை அவர் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் டுவிட்டரில் ரிப் பாலா என்கிற ஹேஸ்டேக் ட்ரண்டிங்கில் இருந்தது. இதில் முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு நடிகர்களின் ரசிகர்கள் மன்றத்தினரும் பாலமுருகனுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டு இருந்தனர்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த நடிகர் விஜய், பாலமுருகனின் வீட்டுக்கு போன் செய்தார். அப்போது அவரது அக்காள் மற்றும் அக்காள் கணவர் ஆகியோரிடம் போனில் பேசினார். இதுபோன்ற முடிவு பண்ணலாமா, இது தவறானது. எதற்கும் தற்கொலை என்பது தீர்வாகாது. நாங்கள் வருத்தப்படுகிறோம். துக்கத்தில் உங்களுடன் நாங்கள் பங்கெடுத்துகொள்கிறோம் என்று பேசி ஆறுதல் கூறினார்.
Related Tags :
Next Story