விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர்கள் அண்ணாதுரை, கிரண்குராலா தேசிய கொடி ஏற்றினர்


விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர்கள் அண்ணாதுரை, கிரண்குராலா தேசிய கொடி ஏற்றினர்
x
தினத்தந்தி 16 Aug 2020 3:45 AM IST (Updated: 16 Aug 2020 7:38 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் அண்ணாதுரை தேசிய கொடி ஏற்றினார். பின்னர் கொரோனா நோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 110 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழுப்புரம்,

நாட்டின் 74-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மூத்த குடிமக்களின்றி சுதந்திர தின விழாவை எளிமையாகவும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கொண்டாடும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு வழிமுறைகளின் அடிப்படையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நேற்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. இதையொட்டி விழா மைதானத்திற்கு காலை 8.45 மணிக்கு கலெக்டர் அண்ணாதுரை வருகை தந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

சரியாக 8.50 மணிக்கு கலெக்டர் அண்ணாதுரை, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து, கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுடன் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினர், வனத்துறையினர், ஊர்காவல் படையினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதன் பிறகு கொரோனா நோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவம், சுகாதாரம், காவல் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் தனிமைப்படுத்துதல் முகாமிற்கு கல்லூரி வழங்கியவர்கள், கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் என 110 பேருக்கு நற்சான்றிதழை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார். தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா முடிவடைந்தது.

இவ்விழாவில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. எழிலரசன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் குந்தவிதேவி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் அம்புரோஸியா நேவிஸ்மேரி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மோகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தாமோதரன், உதவி ஆணையர் (கலால்) மோகன், முன்னாள் படைவீரர் நல அலுவலர் அருள்மொழி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், விழுப்புரம் தாசில்தார் கணேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜன், அஜய்தங்கம், ஊர்காவல் படை மண்டல தளபதி ரகுநாதன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் முக கவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்துகொண்டனர்.

புதிதாக உதயமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் சுதந்திரதினவிழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிரண்குராலா கலந்துகொண்டு தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், வருவாய் அதிகாரி சங்கீதா ஆகியோருடன் சேர்ந்து மூவர்ண பலூன் மற்றும் சமாதான புறாவை பறக்கவிட்டார்.

இதன் பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கலெக்டர் கிரண்குராலா காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை, நகராட்சி துப்பரவு பணியாளர், வேளான்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 55 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ரெத்தினமாலா, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், நகராட்சி ஆணையாளர் பாரதி, முன்னாள் அமைச்சர் மோகன், அ.தி.மு.க. நகர செயலாளர் பாபு, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அலுவலர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story