இலங்கையில் இருந்து மர்ம நபர்கள் ஊடுருவலா? ராமேசுவரம் கடல் பகுதியில் 5 கப்பல்கள் தீவிர கண்காணிப்பு


இலங்கையில் இருந்து மர்ம நபர்கள் ஊடுருவலா? ராமேசுவரம் கடல் பகுதியில் 5 கப்பல்கள் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 16 Aug 2020 4:00 AM IST (Updated: 16 Aug 2020 8:05 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் இருந்து மர்ம நபர்கள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, ராமேசுவரம் கடல் பகுதியில் நேற்று 5 கப்பல்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன.

ராமேசுவரம்,

ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளது. இதனால் தமிழகத்திலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை மற்றும் கடல் பகுதியாக ராமேசுவரம் விளங்குகிறது.

இலங்கையில் இருந்து மீனவர்கள் போர்வையில் கடத்தல்காரர்கள் மற்றும் மர்மநபர்கள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதை தடுக்கவும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்தவும் ராமேசுவரம் கடல் பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி சென்னையில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று ராமேசுவரம் முதல் தொண்டிக்கு இடைப்பட்ட இந்திய கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான இரண்டு அதிவேக கப்பல்களும், இரண்டு ஹோவர் கிராப்ட் கப்பல்களும் மண்டபம் முதல் ராமேசுவரம், தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் இரவு-பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மண்டபம் முதல் ராமேசுவரம் வரையிலான கடல் பகுதியில் நாட்டு படகுகளில் மீன் பிடித்த மீனவர்களிடம் சந்தேகப்படும்படியான நபர்களையோ, படகுகளையோ கண்டால் உடனடியாக இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இதை தவிர உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து, இந்திய கடற்படை ஹெலிகாப்டர் ஒன்றும் ராமேசுவரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் மிகவும் தாழ்வாக பறந்தபடி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

Next Story