கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா: கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 1,181 பேருக்கு பாராட்டு சான்றிதழ் - தேசிய கொடியை ஏற்றி வைத்து கலெக்டர் பிரபாகர் வழங்கினார்
கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 1,181 பேருக்கு கலெக்டர் பிரபாகர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மூவர்ண பலூன்கள், சமாதான புறாக்களை பறக்க விட்டனர். தொடர்ந்து ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமணி தலைமையில் நடந்த போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்ட கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 16 ஆயிரத்து 605 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றி பல்வேறு துறைகளை சேர்ந்த 1,181 பேருக்கு அந்தந்த துறை தலைவர்களிடம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் கள பணியாற்றிய நிறுவனங்களுக்கு பாராட்டு சுழற்கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி ஒன்றியக்குழு தலைவர் அம்சா ராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், மாவட்ட வன அலுவலர் பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, உதவி கலெக்டர் கற்பகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரகுராம், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸ், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story