நாமக்கல்லில் சுதந்திர தினவிழா: கலெக்டர் மெகராஜ் தேசிய கொடி ஏற்றினார் - கொரோனா தடுப்புபணி அலுவலர்களுக்கு பாராட்டு
நாமக்கல்லில் நேற்று சுதந்திர தினவிழாவையொட்டி கலெக்டர் மெகராஜ் தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து அவர், கொரோனா தடுப்புபணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்து உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கலெக்டர் மெகராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் முன்னிலை வகித்தார். அதைதொடர்ந்து போலீசாரின் மரியாதையை ஏற்றுக் கொண்ட கலெக்டர், சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதமாக வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டார்.
பின்னர் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் நேரடியாக ஈடுபட்டு நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இடைவிடாது பணியாற்றி வரும் முன்கள பணியாளர்களான மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமாகி பணிக்கு திரும்பிய வருவாய் ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட 173 நபர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய 25 போலீசாருக்கும் கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.
இவ்விழாவில் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சாரதா, மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளரச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) சித்ரா, துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம், உதவி கலெக்டர்கள் கோட்டைகுமார், மணிராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், நாமக்கல் தாசில்தார் பச்சைமுத்து உள்பட அரசுத்துறை அலுவலர்கள், கொரோனா நோய் தொற்று தடுப்பு பணி முன்கள பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், போலீசாரின் அணிவகுப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் நகராட்சியில் நடந்த சுதந்திர தினவிழாவில் ஆணையாளர் பொன்னம்பலம் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காந்தியடிகள் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். இதில் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேசன், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் சங்கம் சார்பில் நேதாஜி சிலை அருகில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் துணை செயலாளர் கோவிந்தராஜூ தேசிய கொடி ஏற்றினார். இந்த விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக்நவீத், வாசு சீனிவாசன், அசோகமித்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story