ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக குறைந்தது - மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக உயர்ந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக குறைந்தது - மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக உயர்ந்தது
x
தினத்தந்தி 16 Aug 2020 3:30 AM IST (Updated: 16 Aug 2020 9:23 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக உயர்ந்தது.

பென்னாகரம்,

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்தநிலையில் மழை அளவு குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம் வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த தண்ணீர் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் காணப்படுவதால் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. பின்னர் இரவில் வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை மேலும் குறைந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் வந்துகொண்டிருந்தது.

அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 98.59 அடியாக இருந்தது. நேற்று நீர்மட்டம் 99 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 13 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

Next Story