இலங்கை தாதா அங்கொட லொக்கா வைத்திருந்த துப்பாக்கி எங்கே? மதுரை கூட்டாளியிடம் கொடுத்தது அம்பலம்
இலங்கை தாதா கோவையில் தங்கியிருந்தபோது வைத்திருந்த துப்பாக்கியை மதுரையை சேர்ந்த கூட்டாளியிடம் கொடுத்தது அம்பலம் ஆனது.
கோவை,
இலங்கையின் நிழல் உலக தாதா அங்கொட லொக்கா கடந்த மாதம் 3-ந் தேதி கோவையில் மரணம் அடைந்தார். சட்டவிரோதமாக அவர் தங்கியிருந்த அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேசுவரன் மற்றும் இலங்கை தாதாவின் காதலி அம்மானி தான்ஷி ஆகிய 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் தங்கியிருந்த கோவை சேரன்மாநகர் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையில் இலங்கை தாதா அங்கொட லொக்கா தங்கியிருந்த வீட்டில் உரிமம் இல்லாத ஒரு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அங்கொட லொக்கா இறந்தவுடன் அவரது உடலை மதுரைக்கு கொண்டு சென்று எரித்தவர்கள் துப்பாக்கியையும் அங்கு எடுத்துச் சென்று அவரின் கூட்டாளி ஒருவரிடம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த துப்பாக்கியை கைப்பற்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
எனவே மதுரையில் உள்ள அங்கொட லொக்காவின் கூட்டாளி யார்? அவரிடம் கொடுக்கப்பட்ட துப்பாக்கி என்ன ஆனது? என்று விசாரிக்க வேண்டியுள்ளது. லைசென்சு இல்லாத துப்பாக்கியை அங்கொட லொக்கா வைத்திருந்ததால் அதை மறைத்ததற்காக கைதான 3 பேர் மீதும் இந்திய ஆயுத தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்வதற்கான முதல் கட்ட முகாந்திரம் உள்ளது. இதற்காக அவர்களை மதுரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். எனவே கைதான 3 பேரையும் மேலும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தால் தான் மேற்கொண்டு தகவல்கள் தெரியவரும். இதற்கான மனு கோவை கோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் கைதான 3 பேரின் போலீஸ் காவல் நேற்று மதியத்துடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) ஸ்ரீகுமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்பேரில் அம்மானி தான்ஷி, சிவகாமி சுந்தரி ஆகியோர் கோவை மத்திய சிறையிலும், தியானேஸ்வரன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர்.தற்போது கொரோனா பரவல் காரணமாக சிறையில் அடைக்கப்படும் கைதிகள் மத்திய சிறையில் அடைக்கப்படாமல் கிளை சிறையில் 15 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள். அந்த 15 நாட்களில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகாமல் இருந்தால் அவர்கள் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்படுவார்கள். அதன்படி தியானேஸ்வரன் 15 நாட்களுக்கு பெருந்துறை கிளை ச்சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். அதன்பின்னர் அவர் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்படுவார். ஆனால் மற்ற 2 பேரும் பெண்கள் என்பதால் அவர் களை தனிமையில் வைத்திருக்க கிளை சிறைகளில் இடம் இல்லை என்பதால் அவர்கள் 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தனிமையில் தான் வைக்கப்பட்டுள்ளனர் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் அங்கொட லொக்கா மரணம் தொடர்பாக, பிரேத பரிசோதனையின் போது அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட உடற்கூறு பாகங்களின் தடயவியல் மருத்துவ அறிக்கை இன்னும் 2 நாளில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த அறிக்கை இந்த வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story