வடசென்னை பகுதியில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மரணம்
வடசென்னை பகுதியில் வசதியற்ற ஏழைகளுக்காக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் திருவேங்கடம் காலமானார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கெல்லீஸ் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் திருவேங்கடம் (வயது 70). 1973-ம் ஆண்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் எம்.பி.பி.எஸ். முடித்த இவர், வடசென்னை பகுதியான வியாசர்பாடி சி.கல்யாணபுரத்தில் கடந்த 45 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்தார்.பணம் இல்லாதவர்களுக்கு இலவச மருத்துவம் பார்த்து வந்தவர், விரும்பி கொடுப்பவர்களிடம் ஆரம்பத்தில் இரண்டு ரூபாயும், கடைசியாக ஐந்து ரூபாயும் மருத்துவ கட்டணமாக வசூலித்து வந்தார். இதனால் அவர் ஏழைகளின் டாக்டர் என்று அனைவராலும் புகழப்பட்டார். இவரின் மருத்துவ சேவையை பாராட்டி பல விருதுகள் அவரை தேடி வந்துள்ளது.
மாரடைப்பால் இறந்தார்
கடந்த 45 ஆண்டுகாலமாக மருத்துவ சேவை புரிந்த திருவேங்கடம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக அயனாவரம் ரெயில்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு டாக்டர் திருவேங்கடம் பரிதாபமாக இறந்தார்.
நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் இவரை மையப்படுத்தியே எடுக்கப்பட்டது. உயிரிழந்த டாக்டர் திருவேங்கடத்துக்கு சரஸ்வதி என்ற மனைவியும், பிரீத்தி என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் சென்னையில் டாக்டர்களாக உள்ளனர். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
இத்தகைய பெருமைக்குரிய டாக்டர் திருவேங்கடம் மறைவு செய்தி கேட்டதும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
5 ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் திருவேங்கடம் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்ற டாக்டர் திருவேங்கடம் இலவசமாக மருத்துவம் படித்ததாகவும், அதேபோன்று தனது சேவையும் இருக்க வேண்டும் என நினைத்து, வியாசர்பாடி மற்றும் எருக்கஞ்சேரி பகுதியிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவச்சேவை அளித்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், தன்னிடம் சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு 2 ரூபாய்க்கு சிகிச்சை அளித்தார். பல ஆண்டுகளுக்கு பின்னர், 5 ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு தனது இறுதி மூச்சு உள்ள வரை சிகிச்சை அளித்த சிறப்புக்குரியவர்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடைய தன்னலமற்ற சேவையை பல ஆண்டுகளாகப் பெற்றுவந்த வியாசர்பாடி மற்றும் எருக்கஞ்சேரி பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக 5 ரூபாய் மட்டுமே சிகிச்சை கட்டணமாக பெற்றவர் மக்கள் டாக்டர் திருவேங்கடம். எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸ்
5 ரூபாய் டாக்டர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில், சென்னை வியாசர்பாடி பகுதியில் ஏழை மக்களுக்கு ரூ.5-க்கு மருத்துவம் செய்து வந்த டாக்டர் திருவேங்கடம் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அவருடைய குடும்பத்துக்கு என்னுடைய இரங்கலும், அனுதாபமும் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய சேவை அவர் புகழை பாடும் என்று கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story