தளர்வு இல்லாத முழு ஊரடங்கு: நாகையில் கடைகள் அடைப்பு; வெறிச்சோடிய சாலைகள்
நாகையில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
நாகப்பட்டினம்,
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. கடந்த மாதத்தை போல இந்த மாதமும் (ஆகஸ்டு) அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதம் நேற்று 3-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாகை மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு காரணமாக நேற்று மருந்து கடைகள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன.
இதனால் நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட நகரங்களில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஓட்டல்கள் கூட திறக்கப்படவில்லை. முழு ஊரடங்கையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசுந்தரம் மற்றும் போலீசார் முழு ஊரடங்கையொட்டி நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி பெட்டிக்கடைகளை திறந்திருந்த சேது சாலையை சேர்ந்த இளஞ்சந்திரன் (வயது59), வைத்தியநாதன் (38), சிங்காரவேல் (50), சோமநாதர் கோவில் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (40), நெய்விளக்கு பகுதியை சேர்ந்த சரவணகுமார் (26), வேதாரண்யம் பகுதியை சேர்ந்த கருணாநிதி (55) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
குத்தாலம் சுற்று வட்டார பகுதிகளான குத்தாலம், பெரம்பூர், பாலையூர், மங்கைநல்லூர், கோமல், தேரழுந்தூர், திருவாவடுதுறை உள்ளிட்ட முக்கிய இடங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நாடெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக ஜூலை மாதம் முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அரசால் அமல்படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் குத்தாலம் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டு இருந்தன. அத்தியாவசிய தேவைக்காக மருந்தகங்கள் மட்டும் திறந்திருந்தன.
இந்த நிலையில் குத்தாலம்-பந்தநல்லூர் பிரதான சாலையில் குத்தாலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், கதிராமங்கலம் சுகாதார ஆய்வாளர் பாக்கியராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஊரடங்கை மீறி மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து அதிகாரிகள் நிறுத்தினர்.
சீர்காழி பகுதியில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், மயிலாடுதுறை சாலை, சிதம்பரம் சாலை, தென்பாதி, கொள்ளிடம், முக்கூட்டு ஈசானிய தெரு, ரெயில்வே ரோடு, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், பழ கடைகள், மளிகை கடைகள் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. மேலும் அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டன.
இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடின.
Related Tags :
Next Story