கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் ஜாமீனில் வெளிவந்த ரவுடி துண்டு, துண்டாக வெட்டிக்கொலை


கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் ஜாமீனில் வெளிவந்த ரவுடி துண்டு, துண்டாக வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 17 Aug 2020 1:43 AM GMT (Updated: 17 Aug 2020 1:43 AM GMT)

கும்மிடிப்பூண்டியில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி துண்டு, துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது தலை ரெயில் நிலையத்திலும், உடல் தைலமர தோப்பிலும் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ம.பொ.சி.நகர் பகுதியையொட்டி ரெயில் நிலையத்தின் பக்கவாட்டு இரும்பு தடுப்பு ஒன்றின் மீது நேற்று காலை வாலிபர் ஒருவர் தலை மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து கும்மிடிப்பூண்டி துணை சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த வாலிபரின் உடலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக தேடினர். ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் புதுகும்மிடிப்பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தைலமரத்தோப்பில் தலையில்லாமல் உடல் கிடைத்தது.

அந்த உடலில் கைகளும், கால்களும் தனித்தனியாக துண்டு, துண்டாக வெட்டப்பட்டு கிடந்தன. இதையடுத்து போலீசாரின் விசாரணையில் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வாலிபர் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் மாதவன் (வயது 26) என்பது தெரியவந்தது.

பழிக்குப்பழியாக கொலை

மேலும் விசாரணையில், இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி இரவு கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரிந்தது.

இந்த நிலையில் ரவுடியான இவர் ஆரம்பாக்கம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காராமணி மேடு பகுதியை சேர்ந்த முனுசாமி (30) என்பவரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 29-ந் தேதி தான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த 2 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மாதவனை பழிக்கு பழி தீர்க்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு மாதவனை புதுகும்மிடிப்பூண்டி தைலமரத்தோப்பிற்கு அழைத்து வந்த மர்மகும்பல், அங்கு மதுபோதையில் படுகொலை செய்து விட்டு அங்கிருந்து மாதவனின் தலையை மட்டும் கொண்டு வந்து கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே காட்சி பொருள் போல வைத்தது போலீசாருக்கு பல்வேறு கோணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

3 தனிப்படைகள் விசாரணை

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த தடய அறிவியல் நிபுணர்கள் அங்கு கிடந்த மதுபாட்டில்கள் உள்பட சில முக்கிய பொருட்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் துப்பு துலக்க கொண்டு வரப்பட்ட மோப்ப நாய் நிக்கி, புதுகும்மிடிப்பூண்டி தைலமரத்தோப்பில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள பெருமாஞ்சேரி ஏரி வரை சென்று நின்றதில், எதையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மேலும், சம்பவ இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட மாதவனின் உடல் மற்றும் தலையை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் இருந்து புதுகும்மிடிப்பூண்டி தைலமரத்தோப்பு வரை இடைபட்ட பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து உள்ள போலீசார் அதன் அடிப்படையிலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், வெங்கடாசலம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குமணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு உள்ளது. 

Next Story