சேலத்தில் முழு ஊரடங்கு: கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைப்பு - வீடுகளில் முடங்கிய மக்கள்- வெறிச்சோடிய சாலைகள்


சேலத்தில் முழு ஊரடங்கு: கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைப்பு - வீடுகளில் முடங்கிய மக்கள்- வெறிச்சோடிய சாலைகள்
x
தினத்தந்தி 17 Aug 2020 4:00 AM IST (Updated: 17 Aug 2020 8:00 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் வீடுகளில் முடங்கியதால், போக்குவரத்து இல்லாமல் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

சேலம், 

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்தது. அதன்படி கடந்த ஜூலை மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதேபோல் இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் இந்த மாதத்தில் 3-வது வாரமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் மற்றும் தெருக்கள் வெறிச்சோடியது. மக்கள் வெளியே வருவதை தவிர்த்து வீடுகளில் முடங்கினர். மேலும் சாலைகளில் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. மருத்துவமனைகள், மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தன.

சேலம் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் மற்றும் 20 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டன. சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி மற்றும் புறநகரில் ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம் ஆகிய 11 உழவர் சந்தைகளும் மூடப்பட்டிருந்தன. மேலும் தினசரி மார்க்கெட்டுகள் திறக்கப்படவில்லை.

சேலத்தில் செவ்வாய்பேட்டை, லீ பஜார், பால் மார்க்கெட், கடைவீதி ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம் உள்பட அனைத்து மேம்பாலங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.

சேலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என்றும், தேவையில்லாமல் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால் மாநகர் முழுவதும் ஆங்காங்கே போலீசார் சாலைகளில் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தேவையில்லாமல் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் வெளியே சுற்றிய நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஓமலூர், தாரமங்கலம், மேட்டூர், கொளத்தூர், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி, எடப்பாடி, மேச்சேரி, கெங்கவல்லி, ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

சேலத்தில் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி, மீன் கடைகள் தடையை மீறி திறக்கப்பட்டு உள்ளதா? என மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

இந்த மாதத்தில் நேற்று 3-வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் அமைதி நிலவியது. இதுவரை தொடர்ச்சியாக 7-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story