கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை,
கொரோனா தொற்றை கண்டறிவதற்காக மதுரை மாவட்டம் முழுவதும் தினமும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்து வருகிறது. மதுரை முடக்கு சாலையில் நடந்த காய்ச்சல் பரிசோதனை முகாமினை கலெக்டர் வினய் தலைமையில் மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையை பொறுத்தவரை வெறும் 1,057 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர். அதில் ஆஸ்பத்திரியில் 719 பேரும், கோவிட் கேர் செண்டரில் 367 பேரும் உள்ளனர். அதிக பாதிப்பில் இருந்த மதுரையில், அதிகப்படியான காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தியதால் நோய் தொற்று குறைந்து உள்ளது. கொரோனா குறைந்து விட்டது என்று பொதுமக்கள் முக கவசம் அணியாமலும், பொது இடம் மற்றும் பணிபுரியும் இடங்களில் சமூக இடைவெளியினை கடைபிடிக்காமலும் இருக்கக் கூடாது.
உலகசுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதனால் இறப்பின் எண்ணிக்கையும் அதிகமாக தெரிகிறது. ஆனால் கொரோனா இறப்பு குறைவாகத்தான் இருக்கிறது. இதர நோய்களோடு, தற்கொலை, விபத்து உள்ளிட்ட மற்ற இறப்புகளிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் கொரோனா இருந்தால் அது கொரோனா இறப்பாக கணக்கெடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 100 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டால், 8.5 சதவீதம் பேருக்கு பாதிப்பு உள்ளது. தற்போது கடலூர், தென்காசி, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்பு உள்ளது. எனவே அங்கு காய்ச்சல் முகாம்கள் அதிகப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் 24 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் 48 மணி நேரம் ஆகிறது. அதனை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியாவிலேயே சென்னையில்தான் ஒரேநாளில் 40 போலீசார் பிளாஸ்மா தானம் செய்து உள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து குணமாகி உள்ள 18 வயது முதல் 40 வயது வரையுள்ளவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.
கொரோனா சிகிச்சைக்கு கூடுதலாக கட்டணம் வசூலித்த ஒரு தனியார் ஆஸ்பத்திரி மூடப்பட்டது. மற்றொரு ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில ஆஸ்பத்திரிகளில் பெறப்பட்ட கூடுதல் கட்டண தொகை மீண்டும் நோயாளிகளிடம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story