சின்னசேலம் அருகே, ஆடுகளை திருட முயன்றவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
சின்னசேலம் அருகே ஆடுகளை திருட முயன்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே மூங்கில்பாடி கிராமம் குளத்து மேட்டு காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(வயது 50) விவசாயி. இவர் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலையில் பட்டியில் அடைத்து விடுவார். சம்பவத்தன்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலையில் பட்டியில் அடைத்தார். இரவில் ஆடுகள் எழுப்பிய சத்தம் கேட்டு கண்விழித்த முருகேசன் மின் விளக்கை ஒளிரவிட்டு பார்த்தார்.
அப்போது பட்டியில் இருந்து சில மர்மநபர்கள் தப்பி ஓடினர். இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் கிணற்றில் ஏதோ விழுந்த சத்தம் கேட்டு முருகேசன் டார்ச் லைட் அடித்து பார்த்தார். அப்போது கிணற்றின் சுற்றுப்பாதையில் ஒருவர் மறைந்திருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது அவர் பூசப்பாடி கிராமத்தை சேர்ந்த நல்லாப்பிள்ளை மகன் அழகர்(வயது 40) என்பதும், இவருடன் அதே பகுதியை சேர்ந்த ராமன் மகன் செந்தில்(42), ராமசாமி மகன் ரவி(40) ஆகியோர் சேர்ந்து ஆடுகளை திருட வந்ததாகவும், அப்போது முருகேசன் மின் விளக்கை ஒளிர விட்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, செந்தில் தப்பி ஓடிவிட்டதும், ரவி தவறி கிணற்றுக்குள் விழுந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் நீச்சல் தெரியாத ரவி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி அவரது உடலை மீட்டனர்.
இந்த சம்பவத்தை அறிந்து சின்னசேலம் போலீசார் அங்கு வந்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ரவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து அழகரை கைது செய்தனர். மேலும் இவருடன் வந்த செந்தில் தப்பி ஓடிவிட்டார். அவரைபோலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சின்னசேலம் அருகே ஆடு திருட முயன்றபோது தவறி கிணற்றில் விழுந்து ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story