மோட்டார்சைக்கிளில் சென்ற சமையல் தொழிலாளியை தாக்கி சாலையில் வீசிய நபர்கள் - பணம்-செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்
வாணியம்பாடியில் சமையல் தொழிலாளியை தாக்கி பணம்-செல்போன் பறித்தவர்கள் அவரை அதேமோட்டார்சைக்கிளில் ஏற்றிச்சென்று சாலையில் தூக்கி வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த பஷீராபாத் பகுதியை சேர்ந்தவர் அஸ்லம் பாஷா (வயது 40). சமையல் தொழிலாளி. இவர் நியூ டவுன் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் சமையல் வேலை செய்வதற்காக நேற்று அதிகாலை 4 மணிக்கு தனது வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். நியூடவுனில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே சென்றபோது லிப்ட் கேட்பது போல நடித்து 3 பேர் வழிமறித்தனர் அப்போது அஸ்லம்பாஷாவை அவர்கள் கடுமையாக தாக்கினர்.
பின்னர் அவரிடம் இருந்த ரூ.19 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்ட அவர்கள், அஸ்லம்பாஷாவை அதே மோட்டார்சைக்கிளில் அமர்த்திக் கொண்டு பக்கத்தில் உள்ள தெருவுக்கு சென்று கற்களால் அவரது தலையில் கடுமையாக தாக்கினர். இதில் மயக்கமடைந்த நிலையில் அஸ்லம்பாஷாவை சாலையில் வீசிச் சென்று விட்டனர்.
அதிகாலையில் அஸ்லம் பாஷா சாலையில் விழுந்து இருப்பதை பார்த்தவர்கள், குடிபோதையில் அவர் இருப்பதாக நினைத்துக்கொண்டு உதவாமல் சென்று விட்டனர். காலை 6 மணிக்கு மயக்கம் தெளிந்து எழுந்த அஸ்லம்பாஷா வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, தப்பிஓடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story