தண்டராம்பட்டு அருகே, விவசாயி உயிரோடு எரித்துக்கொலை - வீட்டுமனை தகராறில் பயங்கரம்


தண்டராம்பட்டு அருகே, விவசாயி உயிரோடு எரித்துக்கொலை - வீட்டுமனை தகராறில் பயங்கரம்
x
தினத்தந்தி 17 Aug 2020 4:00 AM IST (Updated: 17 Aug 2020 9:22 AM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டு அருகே வீட்டுமனை தொடர்பான தகராறில் விவசாயி உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக உறவினர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆலடியான் (வயது 50), விவசாயி. இவருக்கும் இவரது அக்காள் வெள்ளச்சி மகன் சிவக்குமார் (38) என்பவருக்கும் இடையே பூர்விக வீட்டுமனை தொடர்பாக தகராறு இருந்தது. ஆலடியான் 2 அடி இடத்தை கூடுதலாக எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டுமனை தகராறு தொடர்பாக ஆலடியான் மற்றும் அவரது மகன் வெங்கட்ராமன் ஆகியோர் சேர்ந்து வெள்ளச்சியை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை பெற்று, பின்னர் வீடு திரும்பினார். இதற்கிடையில் அவர் கொடுத்த புகாரின்பேரில் சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் வெங்கட்ராமனை கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஆலடியான், எரிந்த நிலையில் அலறி அடித்துக்கொண்டு தெருவில் ஓடி வந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் ஆலடியான் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆலடியான் இறப்பதற்கு முன்னதாக கொடுத்த வாக்குமூலத்தில், தான் வீட்டில் தனியாக இருந்த போது, சிவக்குமார் வீட்டிற்கு வந்து உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்ததாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆலடியான் வாக்குமூலத்தின் அடிப்படையில் சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிவக்குமார் செங்கம் சட்டமன்ற தொகுதி ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story