முழு ஊரடங்கால் நீலகிரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கால் நீலகிரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 17 Aug 2020 11:00 AM IST (Updated: 17 Aug 2020 10:45 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கால் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின.

ஊட்டி, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜூலை மாதத்தை போல் ஆகஸ்டு மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இவர்கள் அவசியமில்லாமல் வாகனங்களில் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஊட்டி சேரிங்கிராசில் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்ட போது, ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரை ஓட்டி வந்த நபர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து குடிபோதையில் கார் ஓட்டி வந்த அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

முழு ஊரடங்கையொட்டி ஊட்டி மத்திய பஸ் நிலையம், கமர்சியல் சாலை, மெயின் பஜார், லோயர் பஜார், மணிக்கூண்டு, எட்டின்ஸ் சாலை, ஹில் பங்க் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் அனைத்து நுழைவுவாயில்களும் அடைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டு இருந்தது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காட்சி அளித்தது.

பால் விற்பனை கடைகள் மற்றும் மருந்தகங்கள் மட்டும் திறந்து இருந்தன. பொதுமக்கள் அவசிய தேவை காரணமாக மருந்து, மாத்திரைகள் மற்றும் பால் போன்றவற்றை வாங்கி சென்றனர்.

கூடலூரில் இருந்து ஊட்டி மற்றும் மைசூரூக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை, கூடலூரில் இருந்து கேரளா செல்லும் நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் கூடலூர் நகரில் உள்ள முக்கிய சாலைகளும் வெறிச்சோடியது.

மேலும் கூடலூர், தேவாலா, தேவர்சோலை, பந்தலூர், மசினகுடி, கொளப்பள்ளி, சேரன்பாடி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். கூடலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குன்னூரில் மார்க்கம் கடைகள், வெளிப்புற கடைகள், பெட் போர்டு, வெலிங்டன், பாய்ஸ் கம்பெனி, அருவங்காடு ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் வாகனங்கள் எதுவும் இயங்காததால் சாலைகள் வெறி சோடி இருந்தன.

கோத்தகிரியில் ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடியது. இதனால் போக்குவரத்து போலீசார் சாலைகளில் எச்சரிக்கை கோடுகள் வரைந்து, வேகத்தடைகளில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் கூறுகையில், கோத்தகிரி நகரின் முக்கிய சாலைகளில் வேகத்தடைகளில் உள்ள வர்ணங்கள் அழிந்ததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். இதனால் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஊரடங்கை பயன்படுத்தி வேகத்தடைகளில் வர்ணம் மற்றும் எச்சரிக்கை கோடுகளை வரைந்தோம் என்று தெரிவித்தார்.

மேலும் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் ஊரடங்கு நேரத்தில் அவசியமின்றி கூடலூரில் இருந்து மேரக்காய் கொள்முதல் செய்ய கோத்தகிரிக்கு வந்த வாகனம், தேவையில்லாமல் சுற்றிவந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர்.

Next Story