கோவை மாவட்டத்தில், கொரோனாவுக்கு 14 பேர் பலி - 395 பேருக்கு தொற்று உறுதி
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 14 பேர் பலியானார்கள். 395 பேருக்கு தொற்று உறுதியானது.
கோவை,
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்டவற்றில் சிகிச்சை பெற்று வந்த 11 ஆண்கள், 3 பெண்கள் என்று 14 பேர் பலியாகி உள்ளனர்.
இதன்மூலம் கோவையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக் கை 185 ஆக அதிகரித்து உள்ளது. கோவையில் சமீப காலமாக கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 பேர் வரை இறந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 14 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 40 வயது தலைமை நர்ஸ், 40 வயது ஆண் மருத்துவ பணியாளர், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியை சேர்ந்த 35 வயது பெண் மருத்துவ பணியாளர், மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 22 வயது பெண், பி.ஆர்.எஸ். போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 22 வயது பெண், உப்பிலிபாளையம் போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 53 வயது ஆணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் தவிர மேட்டுப்பாளையத்தில் 38 பேர், செல்வபுரத்தில் 24 பேர், காரமடையில் 19 பேர், சிங்காநல்லூரில் 13 பேர், ஆர்.எஸ். புரத்தில் 12 பேர், போத்தனூர், சூலூரில் தலா 9 பேர், ரத்தினபுரியில் 8 பேர், நீலிக்கோணம்பாளையம், வடவள்ளியில் தலா 7 பேர், கணபதியில் 6 பேர், குனியமுத்தூரில் 5 பேர் என நேற்று மாவட்டம் முழுவதும் 395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,967 ஆக உயர்ந்தது.
இதனிடையே கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 182 பேர் குணமடைந்தனர். இதுவரை 6,405 பேர் குணமடைந்து உள்ளனர். 2,377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சூலூர் அருகே உள்ள ராவத்தூர் பிரிவில் டி மார்ட் என்ற சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு வேலை செய்து வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியானது.
இது குறித்து தகவல் அறிந்த கண்ணம்பாளையம் பேரூராட்சி சுகாதார அதிகாரிகள் அங்கு சென்று மார்க்கெட்டை மூட உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது.
கோவை-அவினாசி சாலையில் பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் உள்ளது. இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா இறந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு போலீஸ்காரருக்கு தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் கிருமி நாசினி கொண்டு தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.
Related Tags :
Next Story