வெளிநாட்டில் கடத்தப்பட்ட என்ஜினீயரை மீட்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தினர் மனு


வெளிநாட்டில் கடத்தப்பட்ட என்ஜினீயரை மீட்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தினர் மனு
x
தினத்தந்தி 18 Aug 2020 4:45 AM IST (Updated: 18 Aug 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் கடத்தப்பட்ட என்ஜீனியரை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவருடைய குடும்பத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஷில்பா தலைமையில் நடைபெறுவது வழக்கம், தற்போது கொரோனா ஊரடங்கால், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்களது குறைகளை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள புகார் பெட்டியில் மனுவாக போட அறிவுறுத்தப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நெல்லையில் கலெக்டர் ஷில்பா நேற்று பொதுமக்களிடம் காணொலியில் குறைகளை கேட்டார். மேலும் பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்.

பாளையங்கோட்டை மூளிக்குளத்தை சேர்ந்த மணிராஜ் மாரியப்பன் மனைவி வேல்மதி, தன்னுடைய 2 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன், நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, ஏமன் நாட்டில் கடத்தப்பட்ட தனது கணவரை மீட்டு தர வேண்டும் என்று கூறி, மனுவை பெட்டியில் போட்டார்.

அந்த மனுவில், “எனது கணவர் மணிராஜ் மாரியப்பன் கப்பலில் என்ஜீனியராக உள்ளார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் 3-ந்தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஓமன் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.

பின்னர் கணவருடன் 14 இந்தியர்களும், 5 வங்காளதேச நாட்டைச் சேர்ந்தவர்களும் கப்பலில் சவுதி அரேபியாவுக்கு சென்றபோது, ஏமன் நாட்டில் அவர்களை சிலர் கடத்தி சென்று, அங்குள்ள ஜெனிவா தீவில் தங்க வைத்து உள்ளனர். எனவே வெளிநாட்டில் கடத்தப்பட்ட எனது கணவரையும், அவருடன் பிடித்து செல்லப்பட்டவர்களையும் உடனே மீட்டு தர வேண்டும்“ என்று கூறி உள்ளார்.

மானூர் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, தங்களது ஊரில் உள்ள பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறி, புகார் பெட்டியில் மனுவைபோட்டனர்.

அகில இந்திய மஜ்லிஸ் ஏ இத்திஹாதுல் முஸ்லிமின் அமைப்பினர் நெல்லை மாவட்ட தலைவர் ஷலானி தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் செலுத்திய மனுவில், சுத்தமல்லி பகுதியில் உள்ள ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும். இலங்கை தமிழர்களின் மயானத்திற்கு ஒதுக்கிய நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதை மீட்டு தரவேண்டும் என்று கூறி உள்ளனர்.

தமிழக விவசாயிகள் நலவாழ்வு சங்கத்தினர் ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் பெட்டியில் செலுத்திய மனுவில், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளத்தில், வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் மர்மமான முறையில் இறந்த விவசாயி அணைக்கரைமுத்துவின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும். வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Next Story