தமிழ் வாலிபர் மரண வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு படை மும்பை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


தமிழ் வாலிபர் மரண வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு படை மும்பை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

தமிழர் மரண வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு படையை அமைக்குமாறு மும்பை போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மும்பை ஜூகு பகுதியை சேர்ந்த தமிழர் ராஜூ வேலு (வயது22). இவர் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி இரவு ஊரடங்கின் போது உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். ஊரடங்கின் போது வெளியே சுற்றியதாக கூறி ரோந்து பணியில் ஈடுபட்ட ஜூகு போலீசார் தாக்கியதில் ராஜூ வேலு உயிரிழந்ததாக தெரிகிறது.

ஆனால் திருடன் என நினைத்து பொதுமக்கள் தாக்கியதால் வாலிபர் உயிரிழந்ததாக போலீசார் கூறினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது போலீசார் 4 பேர் ராஜூ வேலுவை தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து 8 போலீஸ்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இதில் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வக்கீல் ஒருவர் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது தமிழ் வாலிபர் மரண வழக்கை சிறப்பு புலனாய்வு படை அமைத்து விசாரணை நடத்த மும்பை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டனர்.

இதுகுறித்து தலைமை நீதிபதி திபான்கர் தத்தா, நீதிபதி அனுஜா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், “உயிரிழந்தவரின் மரணத்தில் போலீசாருக்கு தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது. மும்பை போலீசார் முடிந்த வரை வேகமாக இந்த வழக்கை முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நேர்மையான, நாணயத்தில் சந்தேகம் எழுப்ப முடியாத 2 சீனியா் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு படையை 24 மணி நேரத்தில் அமைக்க மும்பை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடுவதை தவிர வேறு வழியில்லை.

இந்த சிறப்பு படை ஒரு மாதத்துக்குள் சம்பவம் குறித்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் என எதிர்பாக்கிறோம்” என கூறியுள்ளனா்.

Next Story