கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2020 3:45 AM IST (Updated: 18 Aug 2020 6:36 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிக்கல்,

தமிழகம் முழுவதும் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று கீழ்வேளூர் வடக்குவெளி டாஸ்மாக் கடை முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். இதில் தொ.மு.ச. மாநில செயலாளர் செந்தில்குமார், ஏ.ஐ.டி.யூ.சி. பொருளாளர் அம்பேத்கார், அரசு பணியாளர் சங்க பொருளாளர் கோபால் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கொரோனாவால் இறந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் மயிலாடுதுறை வண்டிக்காரத்தெருவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் முன்பு அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரவேல் தலைமை தாங்கினார். 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

வேதாரண்யம் நாகை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

நாகை மருந்துக்கொத்தள தெருவில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் பாலகுரு, மாவட்ட அமைப்பு செயலாளர் சுபாஷ் சந்திரபோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story