விக்கிரமங்கலம் அருகே, மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி - தென்னை மட்டை வெட்டச்சென்றபோது பரிதாபம்


விக்கிரமங்கலம் அருகே, மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி - தென்னை மட்டை வெட்டச்சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 18 Aug 2020 3:45 AM IST (Updated: 18 Aug 2020 7:11 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமங்கலம் அருகே தென்னை மட்டை வெட்டச்சென்ற எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ரகுபாலன்(வயது 30). எலக்ட்ரீசியனான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு ரகுபாலன் வந்தார்.

இந்நிலையில் முத்துவாஞ்சேரி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள அவரது நண்பர் ரமேசுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தின் மட்டைகளை வெட்டுவதற்காக ரகுபாலன் சென்றார். அந்த வழியாக செல்லும் மின் இணைப்பு இல்லாத மின்கம்பிகளை கழற்றிவிட்டு, பின்னர் தென்னை மரத்தில் மட்டைகளை வெட்டுவதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி மின்கம்பத்தில் ஏறி ஒரு முனையில் உள்ள மின் கம்பிகளை கழற்றியுள்ளார்.

அப்போது எதிர்முனையில் உள்ள மின்கம்பத்தில் மின் இணைப்பு இல்லாத கம்பிகள், மின் இணைப்பு உள்ள மின் கம்பிகளோடு இணைந்துள்ளன. இதனால் ரகுபாலன் கையில் பிடித்திருந்த மின்கம்பியில் மின்சாரம் பாய்ந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய உடல் மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகள் மீது தொங்கியபடி இருந்தது.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார், தா.பழூர் மின்வாரிய அதிகாரிகள் வந்தனர். அவர்கள் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த ரகுபாலனின் உடலை மீட்டனர். இதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story