அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியது பெற்றோர் ஆர்வமுடன் பிள்ளைகளை சேர்த்தனர்


அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியது பெற்றோர் ஆர்வமுடன் பிள்ளைகளை சேர்த்தனர்
x
தினத்தந்தி 18 Aug 2020 7:30 AM IST (Updated: 18 Aug 2020 7:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நேற்று முதல் தொடங்கியது. பெற்றோர் ஆர்வமுடன் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தனர்.

சென்னை,

கொரோனா பீதி நிலவும் சூழ்நிலையில் 2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் எப்போது தொடங்கும்? என பெற்றோர் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையும், பிற வகுப்புகளுக்கு அதாவது ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கான மாணவர் சேர்க்கையும் 17-ந் தேதி (அதாவது நேற்று) முதல் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நேற்று முதல் தொடங்கியது.

அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நேற்று தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்காக ஆர்வமுடன் பெற்றோர் வந்திருந்தனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற கோரி அரசு அறிவித்து இருந்தது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் நேற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடந்தது.

மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என அனைவருமே முக கவசம் அணிந்து இருந்தனர். சமூக இடைவெளி கடைப்பிடித்தபடியே மாணவர்களும், பெற்றோர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ‘சானிடைசர்’ தெளிக்கப்பட்டும், தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்த பின்னரே மாணவர்களும், பெற்றோரும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்கள் என்ற வீதத்திலேயே மாணவர் சேர்க்கை நடந்தது. தனியார் பள்ளிகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த 10-ந் தேதி வெளியானது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று முதல் அந்தந்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது. மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு சென்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொண்டனர். தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் பெயர், மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களை மாணவர்கள் சரிபார்த்து வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. திருத்தங்கள் இருந்தால் தலைமை ஆசிரியர் மூலம் திருத்தம் பெற்றுக்கொண்டு சான்றிதழ் பெறவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மாணவர்கள் உரிய வழிமுறைகளை கடைப்பிடித்து தங்கள் மதிப்பெண் சான்றிதழை பெற்று சென்றனர்.

1-ம் வகுப்பை பொறுத்தமட்டில், சில பெற்றோர் கொரோனா பீதி காரணமாக தங்களது பிள்ளைகளை அழைத்து வரவில்லை. ஆனாலும் அரசு ஏற்கனவே அறிவித்தபடி அவருடைய குழந்தைகளுக்கும் பள்ளிகளில் அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல மாணவர் சேர்க்கையில் ஏதேனும் ஆவணம் சமர்ப்பிக்கப்படாமல் இருந்தாலும் மாணவர்களை பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்திருந்தது.

அதன்படியே நேற்று மாணவர் சேர்க்கையின்போது அரசின் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. சில பெற்றோர் குறிப்பிட்ட ஆவணங்கள் கொண்டுவராமல் மாணவர் சேர்க்கைக்காக வந்திருந்தனர். அந்த பெற்றோரிடம், அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் காலக்கெடுவும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஏற்படுத்திய தாக்கம் காரணமாக வேலைவாய்ப்பு இழப்பு, வருமானம் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பல பெற்றோர் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ப்பதற்காக அழைத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வகுப்பறைகளில் மாணவர்கள் எண்ணிக்கை நிரம்பும் வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை 24-ந் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

Next Story