மண்ணச்சநல்லூரில், புறவழிச்சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் - கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
மண்ணச்சநல்லூரில், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்து புறவழிச்சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமயபுரம்,
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பயண நேரத்தை குறைத்து மக்களுக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலும் புறவழிச்சாலை அமைக்க ரூ.25 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
முதல்கட்டமாக சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து அத்தாணியிலிருந்து மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் புறவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த மே மாதம் தொடங்கியது. இந்த திட்டத்தின்கீழ் பெருவளை வாய்க்கால் பாலத்தின் குறுக்கே 20 மீட்டர் நீளம் 15 மீட்டர் அகலம் உள்ள ஒரு பாலமும், புள்ளம்பாடி வாய்க்காலின் குறுக்கே 18 மீட்டர் நீளமும், 23 மீட்டர் அகலமும் கொண்ட பாலமும், இடைப்பட்ட இடங்களில் உள்ள பாசன வாய்க்கால்களின் குறுக்கே மக்களுக்கு பயன்படும் வகையில் சுமார் 16 சிறிய பாலங்களும் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், இந்தத் திட்டப் பணிக்காக மண்ணச்சநல்லூர், உளுந்தங்குடி, பூனாம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இதுவரை இழப்பீடு தொகை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டும் எவ்வித பலனும் இல்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று காலை புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வரும் இடத்தில் இரு சக்கர வாகனங்களை குறுக்கே நிறுத்தியும், இழப்பீடு தொகையை உடனே வழங்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவல் அறிந்த லால்குடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஹரிகிருஷ்ணன், மண்ணச்சநல்லூர் உதவி செயற்பொறியாளர் விவேகானந்தன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்குரிய இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திருச்சி மாவட்டம், இ.வெள்ளனூர் அருகே சாலை அமைக்கும் வழியில் 8 விவசாயிகளின் நிலம் கையகப்படுத்த இருந்தது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்தநிலையில், 8 பேருக்கு சொந்தமான 4.17 ஏக்கருக்கு ரூ.26 லட்சத்து 69 ஆயிரத்து 735 இழப்பீடாக மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வைப்பு தொகையாக வைத்து சாலைப் பணி தொடங்கப்பட்டது.
Related Tags :
Next Story