8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொம்மிடி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாதைப்புதூர் கிராமத்தில் 8 வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலத்தில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மூர்த்தி, சென்னகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் கோம்பூர், சின்னமஞ்சவாடி, பெரிய மஞ்சவாடி லட்சுமாபுரம், நடுப்பட்டி, காளிப்பேட்டை, பட்டுகோணம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் குடும்பத்தினருடன் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த 8 வழிச்சாலை வழக்கு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்ட திருத்தம் 2020-ஐ திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story